இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் பி.ஆர் .அம்பேத்கரின்
அற்புதமான வரலாற்றை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தயாரிப்பில் மராத்தியில் பல நல்ல படங்களை இயக்கி வழங்கிய ஜப்பார் படேல் இயக்கத்தில்
மலையாள நடிகர் மம்மூட்டியின் நடிப்பு ஜொலிப்பில் திரைக்காவியமாக 2000ஆம்
ஆண்டிலேயே இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்து, மூன்று தேசிய விருதுகளையும் வென்றுள்ளது. அவர் வாழ்ந்த காலத்துக்கும்,அம்பேத்கரோடு சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி வரலாறுக்குள்ளும் இழுத்துச் செல்லும் விதமாக ‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்’ படம் 2002 ல் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, 2010 வரை படப்பெட்டிக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் தமிழநாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் குரல் கொடுத்ததாலும்,சமூக ஆர்வலர் திரு. சத்தியசந்திரன் உயர்நீதி மன்றத்தில் வெளியிடுமாறு வழக்கு தொடுத்ததாலும் டிசம்பர் 3 ல் சென்னை,கோவை, மதுரை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் திரைக்கு சிலர் மட்டுமே பார்த்து ஆரவரமில்லாமல் போனது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்சங்கம் பல தொழிற்சங்கங்களையும்,தலித் அமைப்புகளையும் இணைத்துக்கொண்டு திரையரங்குகளோடும் தேசிய திரைப்படக் கழகத்தோடும் ஒப்பந்தம் செய்துகொண்டு சுமார் 50 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதன் பின்னணியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைமையில், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், பி எஸ் என் எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், குமரி மாவட்ட சி ஐ டி யூ , போக்குவரத்து சி ஐ டியூ, அம்பேத்கர் பாசறை, அம்பேத்கர் டிரஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ஐ எஸ் ஆர் ஓ ஊழியர் சங்கம், ஐ ஆர் இ எஸ் சி எஸ் டி சங்கம், அகில இந்திய எஸ் சி எஸ் டி ஊழியர் சங்கம், மார்த்தாண்டம் நவ ஜோதி டிரஸ்ட், வில்லுக்குறி தாழ்த்தப்பட்டோர் ,பிற்படுத்தப்பட்டோர் ,மிகவும் பிற்படுத்தப் பட்டோர் நலச்சங்கம், இறையரசு இயக்கம், சால்வேசன் ஆர்மி நலச்சங்கம் ஆகியோர் இணைந்து ‘அம்பேத்கர் திரைப்பட திரையிடல் கூட்டமைப்பு’ உருவாக்கி மக்கள் இயக்கமாக செயல்பட்டு
பிப் 25,2011 முதல் பிப் 28 வரை 12 காட்சிகளில் சுமார் 5400 பேரை பார்க்கவைத்தது சமூக நீதி வரலாற்றின் சமூக கடமையின் அடையாளமாக மாறிப்போனது. நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள ஏ வி எம் திரையரங்க உரிமையாளர் திரு மனோகரன், பொறுப்பேற்று நடத்திய திரு பழனி, மானேஜர் திரு முருகன் ஒப்புதலும்,ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது.இறுதி நாளில் முன்னாள் எம் பி தோழர் ஏவி பெல்லார்மின் கூட்டமைப்பு சார்பில் கௌரவிக்கப்பட்டார்கள்.
துவக்கநாளான 25பிப் காலை 9 மணிக்கு அண்ணா ஸ்டேடியம் முன்பு அம்பேத்கர்
சிலைக்கு மாலையணிவித்து பேரணியாக நாகர்கோவில் களரி கிராமியக் கலைக்குழுவின் பறையாட்டத்தோடு திரையரங்கம் அடைந்து 10 மணிக்கு சுற்றுலாத்துறை மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் திருமிகு என்.சுரேஷ்ராஜன் , தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளரும் ,அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென்மண்டல பொதுச் செயலாளருமான தோழர் சுவாமிநாதன் ஆகியோர் துவக்கிவைத்து உரையாற்ற, சாகித்திய அகாடமி பரிசுபெற்ற நாவலாசிரியர் பொன்னீலன் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜன் ஆகியோரின் வாழ்த்துரையும் படம் பார்க்கவந்தோரை
உற்சாகமடைய வைத்தது.
சின்னவயதிலேயே படிக்கிற இடம், நடக்கும் வீதி,வாழும் ஊர்,வசிக்கும் வீடு
இப்படி எங்கு போனாலும் தீண்டாமை அவலத்துக்குத் தள்ளப்பட்டு , அவமானங்களை மென்று விழுங்கிவிட்டு,சாதுமகாராஜ் உதவியுடன் அமெரிக்கா, இங்கிலாந்து செல்லும்போது இந்தியன் என்ற நிறபேதவெறியால் அவமானப்பட்டும் தன்னம்பிக்கையோடு உயர்கிறார் அம்பேத்கர். வேலை கிடைத்தும் கூட குடும்பத்தோடு தங்க இடம் தர மறுக்கின்ற சாதிவெறியின் கோரத்திற்கு ஆட்பட்டும், பேராசிராக பணிபுரியும் இடத்திலுங்கூட தீண்டாமைக்கு ஆட்படும் அவலம் நெஞ்சை உலுக்குகிறது.துன்பங்களை தோளில் போட்டு சுமந்து கொண்டு இங்கிலாந்து வட்டமேஜை மாநாடுகளில் கலந்துகொண்டு தாழ்த்தப்பட்ட
மக்களுக்காக வாதாடும் ஊமைகளின் தலைவனாக உயர்வதோடு ‘மூக்நாயக் ‘ ஊமைகளின் தலைவன் என்ற பத்திரிக்கை ஆரம்பிக்கிறார். ஒருபுறம் உள்நாட்டில் தாண்டவமாடும் தீண்டாமைக்கொடுமைகளாகிய ஆலய நுழைவுப்போராட்டமும், சௌதார் குளத்தில் நீரை எடுக்கும் போராட்டம் உட்படபல இயக்கங்களும் ஒடுங்கிக்கிடந்தோரை நிமிரவைத்திட உரிமைபெறும் மாநாடுகளை நடத்தியும், இன்னொருபுறம் அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் குரல் கொடுப்பதை வீரியமாகவே தொடர்கிறார். சனாதன முறையை இறுகப் பிடித்துக்கொண்டு தாழ்த்தப்பட்டோரை மு.ழுமையாக நிராகரிக்கும் மதன் மோகன் மாளவியா போன்றோர் இருக்கும் பின்னணியில் நால்வருணமுறையை ஆதிரித்துக்கொண்டே
தீண்டாமைக்கு எதிராக இயக்கம் நடத்தும் மகாத்மா காந்தி இரட்டை வாக்குரிமைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும்போது காந்திஜியோடும் மோதவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார் அம்பேத்கர். இந்த மோதல்போக்கு இருந்தாலும் இந்திய அரசியல் சட்டத்தை எழுதுகின்ற பெரும்பணிக்கு அம்பேத்கரையே காந்திஜி நேருவிடம் .அவரே பொறுத்தமானவர் என்று அழுத்தமாக மூன்மொழிகிறார். மதன் மோகன் மாளவியா போன்றோரின் உண்மையான சொரூபத்தை படம் வெளிப்படுத்தாத காரணத்தால் காந்திஜி
தலித் விரோதி போல ஒரு தோற்றம் வந்துபோகிறது. காந்திஜி இறந்த செய்தி கேட்டவுடன் அம்பேத்கர் பதைபதைப்போடு அதிர்ச்சியுருகிறார். கருத்துவேறுபாடு அனைவரிடமும் இருக்கும். அதையுங்கூட போக்குவதற்கு போராடவேண்டும் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
முதலில் இந்துமத சீர்திருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த நேருஜி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு வரும்போது வெற்றிபெறி உதவ வில்லை .இந்த ஏமாற்றத்தை ஜீரணிக்கமுடியாமல் மந்திரிபதவியை துச்சமாக மதித்து உதறித் தள்ளுகிறார்.சாதிய படிநிலையை இறுக்கமாக வைத்திருக்கும் இந்துத்துவத்தை கேள்விக்கு உட்படுத்துகிறார்.அனைத்து மதங்களையும் ஆய்வு செய்து எல்லா மத ஞானிகளும் தங்களை ஆண்டவனின் அவதாரமெனக் கூறிக்கொண்டார்கள,ஆனால் புத்தர் மட்டுமே தான் ஒரு வழிகாட்டி என்று கூறிக்கொண்டதோடு புத்தமதம் ஏற்றதாழவற்ற சமூகத்தைப் படைக்க சமதர்மக் கோட்பாட்டை உள்ளடக்கி இருப்பதால் புத்த மத்ததிற்கு மாறுவதற்க முடிவெடுத்து இரண்டு லட்சம் மக்களோடு மாறுகிறார். பெருந்தலைவர் காமராசர்,வ.உ.சி,முத்துராமலிங்கத் தேவர், பொதுவுடமை பூங்காவில் பூத்த மலர் ஜீவா,ஆகியோரை,இன்னும் பல தேசிய தலைவர்களை சாதீய கூண்டுக்குள் அடக்கிவிட்ட கொடுமையைப் போல அம்பேத்கரையும் பொதுத் தளத்தில் அங்கீகரிக்கும் சூழல் இன்னும் கனியவே இல்லை.பெரியார்,காமராஜர், பாரதி ஆகிய படங்களைப் பார்ப்பதும்கூட மாற்றத்தை விரும்புவோரின் மக்கள் இயக்கம்தான்.அம்பேத்கர் சமூகநீதி வரலாற்றுப் படத்தை பார்ப்பதும் மக்கள் உணர்வுகளின் அடையாளம்தான்.
இம்மாவட்டத்தில் பல மேடைகளில் முற்போக்காக முழங்குகிற பேச்சாளர்கள,
எழுத்தாளர்களில் ஏராளமான பேர் திரையரங்கின் பக்கம் எட்டிப்பார்க்கவேயில்லை. பொருளாதார கோரிக்கைகளுக்கு திரளுகின்ற கருத்தால்,கரத்தால் உழைப்போரில் பெரும்பாலோரின் உணர்வும் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது.இப்படிப்பட்ட பலவீனம் இருந்தாலும் , குமரி மாவட்டத்தில் ஏ வி எம் திரையரங்கம் சற்று ஆறுதலான நிலைமையை
பிரதிபலித்தது. சி ஐ டி யூ, போக்குவரத்து சி ஐ டி யூ , அகில இந்திய இன்ஸூரன்ஸ் ஊழியர் சங்கம், ஐ எஸ் ஆர் ஓ ஊழியர் சங்கம், சேமநலநிதி ஊழியர்கள்,அரசு ஊழியர் சங்கம், பி எஸ் என் எல் ஊழியர் சங்கம். உழைக்கும் மகளிர் கூட்டமைப்பு. இறையரசு இயக்க பங்குத் தந்தையர்கள் திரட்டிய மக்களில் பெரும்பாலோர் தலித் அல்லாதோர் என்பது பாராட்டத்தக்கது..
சமூக நீதிக்கான சிந்தனை மெல்லிய ஒளிக்கீற்றாகத் தெரிவதன் அடையாளம் இது.
இன்சூரன்ஸ் துறையில் பணிபுரியும் உடல் ஊனமுற்ற ஒரு பிராமண சகோதரி ஜானகி உள்ளத்தில் மனிதநேயம் திடகாத்திரமாக வைத்திருப்பதால் இவ்வரலாற்றை ஊட்ட 5 காட்சிகளுக்கும் மாணவர்களையும்,ஆட்களையும் அழைத்து வந்து பார்க்கச் செய்த துடிப்பின் மகிமை அம்பேத்கரால் பயனடைந்தோர் ஏராளமான மெத்தப் படித்தவர்கள் பார்க்காத போது இச்சகோதரியின் ஆர்வம் நெஞ்சை நெகிழவைக்கிறது. ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ என்ற சங்கப் பாடலை நிஜமாக்குகிறது. இயக்கத்திற்கு நம்பிக்கை நெம்புகோல் கொடுக்கிறது.
No comments:
Post a Comment