தமிழ்நாடு முறபோக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்
11வது மாவட்ட மாநாடு.மஞ்சாலுமூடு
கலை இலக்கிய ஸ்தாபன செயல் அறிக்கை
30 ஜூலை,2011
மாநாட்டுப் பிரதிநதிகள் அனைவருக்கும் வணக்கங்களும் வாழத்துக்களும்.மாநாட்டு கலை இலக்கிய மற்றும் ஸ்தாபன செயல் அறிக்கையை இம்மாவட்டத்தின் பண்பாட்டு சூழலோடு சமர்ப்பிப்பதில் பெருமையடைகிறேன். கன்னியாகுமரி மாவட்டம், தென்னையும் கமுகும்,வாழையும் ரப்பரும் செந்நெல்லும் அடங்கிய பசுமை படர்ந்த இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம் மட்டுமல்ல,இலக்கிய வளமும் கலைகளும்நிறைந்தமாவட்டமும்ஆகும்.
சீர்திருத்த வரலாறும்,சுதந்திரப்போராட்ட வரலாறும் செழித்துள்ளதும்,கலைவாணரும்,ஜீவாவும்,செய்குதம்பிபாவலரும்,கவிமணியும்,கவிமணிதாசனும்,அதங்கோட்டு ஆசானும் கலைஇலக்கியத்தில்
ஜொலித்தும், வேலுத்தம்பி தளவாயும்,செண்பகராமனும், எம் இ நாயுடு,சிவன்பிள்ளையும் ,சி பி.இளங்கோவும்,சிவமுத்துக்கருப்பபிள்ளையும் இன்னும் பிறரும் சுதந்திரத்திற்காக இயக்கத்தில் ஈடுபட்டு அரப்பணித்ததும் இம்மாவட்டத்தில். குமரிமாவட்டம்.தமிழகத்தோடு இணைக்கப் பாடுபட்டோர்களில் ஜி.எஸ்.மணி,நேசமணி,குஞ்சன் நாடார் ஆகியோர் பிறந்த மாவட்டம் இதுவே.அதுபோல அய்யா வைகுண்டர்,
,ஸ்ரீமன் நாராணகுருவின் சீர்திருத்தப் பணியின் தாக்கமும் நிறந்த மகோன்னதமான மாவட்டம் ஆகும்.
தற்கால முதுபெரும் இலக்கியப் படைப்பாளிகளும்,சாகித்ய அகாடமி விருது
பெற்றவர்களுமான நாவலாசிரியர் பொன்னீலன்,தோப்பில் முகமது மீரான்,
நீல பத்மநாபன்,நாஞ்சில் நாடன் ஆகியோரும்,பிரபல எழுத்தாளர் ஜெயமோகனும்,மறைந்த முதுபெரும் எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஆகியோரும் ஒவியத்தில் உலகசாதனை படைத்துவரும் கின்னஸ் சாதனையாளர் ஒவியர் மார்த்தாண்டம் ராஜசேகரன், 72 மணி நேரம் முறபோக்கு நிகழ்ச்சிகள் வழங்கி கின்னஸ் ஏட்டில் இடம் பிடித்தவரும் மனித வள மேம்பாட்டுத் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டவருமான சின்னத்துரை ஜஸ்டின்,நாடகத் துறையில் பல நாடகக் கலைஞர்களை உருவாக்கி,நாடகங்களை எழுதி,இயக்கி தமிழக அரசின் கலைமுதுமணி விருதும் பெற்ற நாடகவேந்தன் இரணியல் கலைத்தோழன்,பொன்மனை சிநேகலதா ஆர்ட்ஸ் கிளப்பும்,மஞ்சாலுமூடு உதயா ஆர்ட்ஸ் கிளப்பும் மேடைநாடகத்தின் மூலம் முற்போக்கு எண்ணங்களை மக்களிடம் விதைத்து பிரகாசித்த பாரம்பரியமிக்க மண் இது.
திரையுலகில் எஸ்.வி.சுப்பையா,இயக்குனர் பி.சி.அனபழகன், திக்குறிச்சி சுகுமாரன், கமுகற புரிஷோத்தமன், கலைமாமணி பாலாசிங்,ஜே.சி
டானியல்,நடிகர் டி.கே.பகவதி,நடிகர் கோபகுமார் ஆகியோர் இடம் பிடித்துப் பெருமை சேர்க்கும் மாவட்டமாகும் .
I குமரி மாவட்டத்தின் குறிப்பிடத் தகுந்த சிறப்பு அம்சங்கள்
1.1 குமரி மாவட்டத்தின் மக்கள் தொகை 2011 கணக்குப் படி18,63,174 ஆகும். ஆண்கள் 9,26,800 பெண்கள்9,36,374 ஆகும்.
1.2 திரிவேணி சங்கமlத்தில் வள்ளுவர்; கன்னியாகுமரியில் மூன்று கடல்களும் சங்கமிக்கும் இடத்தில் முப்பால் வள்ளுவம் 133அடி உலகுக்கே கலங்கரை விளக்காக உயர்ந்து நிற்கிறது.வட்டக்கோட்டை 18ஆம் நூற்றாண்டில் மார்த்தாண்டவர்மாவின் படைத் தளபதி டிலனாய் உத்தரவுப்படி கட்டப்பட்ட படைத் தளம் ஆகும்.
1.3 தொட்டிப்பாலம் திருவட்டாரிலிருந்து 3 கி மீ தொலைவில் மாத்தூர் என்னுமிடத்தில் அமைந்தள்ள தொட்டிப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பாலமாகும்.115 அடி உயரம்,1 கி மீ நீளம், ரூ 13 லட்சம் செலவில் 1966 ல் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் காலத்தில் கட்டப்பட்டது.
1 4.சங்குத்துரை கடற்கரை;
சொத்தவிளை கடற்கரை, தெக்குறிச்சி கடற்கரை,முட்டம் கடற்கரை,குளச்சல் கடற்கரை, தேங்காபட்டிணம் கடற்கரை ஆசியாவிலேயே அதிக காற்று வீசும் பகுதியான ஆரல்வாய்மொழி,முப்பந்தல் பகுதி, ஆகியவை சிறப்பு வாய்ந்தவை மகாபலி
புரத்திற்கு அடுத்தபடியாக சிற்பக் கலையில் சிறந்து விளங்கும் மயிலாடி எனும் ஊர். குமரி மாவட்டத்தில்தான் இருக்கின்றன.
1.5 அ. வைணவ சைவக் கோவில்கள் மற்றும் நாட்டுப்புற தெயவங்கன்
சங்க காலத்தில் தமிழகத்தில் வழிபாட்டிற்கு உரியதாய் விளங்கிய
கொற்றவை, மாயோன் சிவன்,பலராமன் முருகன், வருணன் , இந்திரன்
முதலியஆரம்பகாலக் கடவுள்கள இந்த மாவட்டத்திலும் வழிபடப்பட்டிருகலாம் சங்க இலக்கியங்கள் கூறும் இச்செய்திகள் இம்மாவட்டத்துக்கு பொருந்தும். குமரி மாவட்டம் ஆரம்ப கால மன்னர்களான ஆய்மன்னர்கள் வைணவச் சார்புடையவர்களாக இருந்ததால் இம்மாவட்டம் வைணவச் செல்வாக்கு பெற்றிருக்கிறது.
இம்மாவட்டத்தில் உள்ள வைணவக் கோயில்களில் 35 கோயில்கள் குறிப்பிடத்தகுந்தன். திருமால் நின்றகோலமாக பறக்கை ஊரிலும்,இருந்த
கோலத்தில் திருப்பதிசாரத்திலும்,கிடந்த கோலத்தில் திருவட்டாரிலும் இருக்கின்றார்.
1.5 ஆ.சமணமதம்
19-ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை குமரி மாவட்டத்தில் சமண மதத்தைத் தழுவிய மக்கள் வாழந்திருக்கின்றனர். கோட்டாறு,திருநந்திக்கரை திருச்சாரணத்துமலை,குறண்டி,சிதறால் ஆகியன குறிப்பிடத் தகுந்த சமணத் தலங்களாகும்.
குறத்தியரை,புத்தேரி,கன்னயாகுமரி ஆகிய இடங்களைப் பற்றிய நாட்டார் வழக்காறுகளும் அவ்வையாரம்மனின் வழிபாட்டுக் கூறுகளும், சிவாலய ஓட்டச் செய்திகளும் இம்மாவட்டத்துக்கும் சமணத்துக்கும் உள்ள உறவை விளக்குவதாக ஆய்வாளர் அ.கா.பெருமாள் குறிப்பிடுகிறார்.
1.6.சிறு தெயவங்கள் நாட்டார் தெயவங்கள்
மொத்தம் 176 நாட்டுப்புற தெய்வங்கள் குமரி மாவட்டத்தில் 33 வகைகளில் மாடன்சாமி இவைகளில் அடங்கும்.
1.7 பெருந்தெயவக் கோயில்கள்
இம்மாவட்டத்தில் மகா சிவராத்திரியன்று வழிபாடு நடைபெறுகிறது.
பக்தர்கள் 102 கி.மீட்டர் தூரத்திற்குள் அடங்கிய 12 சிவாலயங்களை ஒரே நாளில் ஓடித் தரிசிக்கிறார்கள். முஞ்சிறை (திருமலை) திக்குறிச்சி, திற்பரப்பு,
திருநந்திக்கரை, பொன்மனை,பன்னிப்பாகம்,கல்குளம்,மேலாங்கோடு,திருவிடைக்கோடு,
திருவிதாங்கோடு,திருப்பன்றிக்கோடு,நட்டாலம் ஆகிய ஊர்களில் உள்ள
சிவாலயங்களே அவைகள்.
1.8அதிகமான மக்கள் சேரந்து திருவிழாக்கள் மற்றும் வழிபாடு செய்யும் ஆலயங்கள்
கன்னியாகுமரி பகவதியம்மன், சுசீந்திரம்,தாணுமாலையன், நாகர்கோவில் நாகராஜா கோவில்,குமாரகோவில் முருகன் கோவில்,மண்டைக்காடு பகவதியம்மன்,கொல்லங்கோடு பத்திரகாளியம்மன், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்,கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன், மருங்கூர் முருகன் கோவில், மகாதானபுரம் சூரண்பாடு(ஆயுத பூஜை சமயத்தில்) தோவாளை முருகன் கோவில்,வெள்ளிமலை, ஆரலவாய்மொழி,தேரிவிளை முருகன் கோவில்கள் ஆகியவை ஆகும்.
1.9 அய்யா வழி
19 ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் திருவிதாங்கூர் பகுதியில் நிலவிய சமூக ஒடுக்குமுறை,தீண்டாமைக்கு எதிராகவும,நிலவுடைமைச் சுரண்டலுக்கு எதிராகவும், மேல்சாதியின் ஆக்கத்திற்கு எதிராகவும்,பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும்,மன்னனின் மேல்சாதி ஆதரவோடு தொடுத்த ஆதிக்கத்திற்கு எதிராகவும்,ஒடுங்கிக் கிடந்த பள்ளு,பறை,நாடார் போன்ற பதினெட்டு சாதிகளையும் ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஏற்றி,விடியலுக்கு வித்திட்ட முத்துக்குட்டி
சுவாதிகள் எனப்பெயர் விளங்கி மக்கள் மனதில் ‘ஒருவருக்கொருவர் நிரப்பாயிருந்திடுங்கோ’ எனும் கருத்தை விதைத்த அய்யா வைகுண்டர் பிறந்த இடமும், அவர் சமாதியான இடமும் அமைந்திருப்பதும் குமரியின்
தென்முனையில் உள்ள சுவாமித்தோப்பில் ஆகும்.இது இந்து சனாதன வைதீக கோட்பாட்டுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களை இணைத்துக் கொண்டு ஒன்றுசேர்த்து தனி வழிபாடு உருவாக்கினார்.அனபுக்குடி மக்கள்
இயக்கம் என பெயரிட்டார்.
1.10 .கிறிஸ்தவ ஆலயங்கள்
குமரி மாவட்டத்தில் அடிமைத்தனம் அகன்று போவதற்கும் பெண்கள்
மாராப்புச் சேலை அணியும் இயக்கத்தை அய்யா வைகுண்டர் தொடங்கியதை,தொடர்ந்து ஊக்கங்கொடுத்து விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் உருவாக்கிய மதம் ஆகும். தமிழ்நாட்டின் முதல் கிறிஸ்தவ ஆலயமும், மிகவும் பழமை வாய்ந்ததுமான புனிதமேரி ஆலயமும் திருவிதாங்கோட்டில் உள்ளது.ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் குமரி மாவட்டத்தில் கட்டிய திருவிதாங்கோடு அரைப்பள்ளி அமைந்துள்ளது. திருவிதாங்கோட்டில் 12 ஊசிக் கோபுரங்கள் கட்டப்பட்டு முடிக்கப்பட்டு உள்ளன..1983 கணக்கின்படி 309 கத்தோலிக்க ஆலயங்கள் இருந்தன. தூத்தூர் அருகே வள்ளவிளை தூய மரியன்னை அலயம் 450 ஆண்டு பழமை வாயந்தது. ரிங்கிள் தெளபே மூலமாக முதன்முதலாக மயிலாடியில் சர்ச்சும் அதைச்சுற்றி தாமரைக்குளம் பகுதியிலும் உருவான சி எஸ்.ஐ சர்ச்சுகளும், அதிலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலே முதன்முதலாக மதம் மாறியவர் சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளான மகாராசன் வேதமாணிக்கம் என்பது வரலாற்றில் அதன் காரண காரியம் புரியக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. மத வேறுபாடின்றி மக்கள் கூடிடும் திருவிழாவாக கோட்டார் சவேரியார் கோயில் திருவிழா முக்கியமானது.ஆரல்வாய்மொழியிலும், வில்லுக்குறி அருகில் உள்ள தேவசகாயம் பிள்ளை ஆலயமும் வரலாற்று சிறப்புமிக்கது.
1.10 இஸ்லாம் பள்ளி வாசல், தர்ஹாக்கள்
இம்மாவட்டத்தில் 5 சதவீதம் மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய
மக்களின் சேவையும், ஒற்றுமைத்தன்மையும் பாராட்டுக்குரியது.சமூக ஒற்றுமையைக் குறிப்பதற்கு ஆண்டுதோறும் பள்ளியாடி மசூதியில் சம பந்தி
போஜனம் மிக நீண்டகாலமாக நடந்து வருகிறது. புத்தன்பண்டக சாலை,
கோட்டார், இரவிபுதூர் கடை .களியக்காவிளை, நம்பாளி,கடையாலுமூடு,திரிவிதாங்கோடு,திட்டுவிளை,மிடாலம் குத்பா,மேக்காமண்டபம் ஜூம்மா, அரிப்புத்தெரு மாலிக்தினார், இணையம்
ஆகிய இடங்களில் பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன. இந்து,முஸ்லீம் ஒற்றுமையைக் குறிக்கும் பல சம்பவங்கள் இம்மாவட்டத்தில் நடந்துள்ளன.
தக்கலை பீரப்பா 18000 பாடல்கள் இயற்றியவர். மகானாக வாழ்ந்தவர். தக்கலையில் சமாதியானவர்.அந்த இடம் தக்கலை தர்ஹா ஆகும். ஆண்டுதோறும் ரஜப்பிறை மாதம் 1முதல்14 வரை மிகச்சிறப்பாக நினைவு விழா கொண்டாடப்படுகிறது.
II. கலை இலக்கிய அறிமுகம்
மனித சமூகத்தின் உழைப்பிலிருந்து தோன்றியவைதான் கலையும் இலக்கியமும். கிராமிய நடனங்களும்., வாய்வழியே படர்ந்த எழுதப்படாத இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை தீர்க்கமான வரலாறு உண்டு. தெளிவான நோக்கங்களும் அவைகளின் தாக்கங்களும் விளைவுகளும் ஏராளம் மக்களிடையே நிகழ்ந்ததுமுண்டு.
இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் ஊர்த்திருவிழா
காலத்தில் நாடகம் என்பது ஒரு முக்கிய பகுதி. ஆங்கிலேயனுக்கு எதிராக சிந்தனைகளை விதைக்க நாடகத்தை கருவியாக்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் கலைஞர்கள்.
தோழர் கே.பி.ஜானகியம்மாள், விஸ்வநாததாஸ் நடித்த வள்ளி திருமண நாடகத்தில்
‘வெள்ளைக் கொக்குகளா வெரட்டியடிச்சாலும் வாறீகளா’
என்ற பாடல் ஆங்கில ஆதிக்கத்தை அம்பலப்படுத்தி மக்களை ஆங்கிலேயனுக்கெதிராக ஆர்ப்பரிக்க வைத்தது.
ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராகவே நாடகம் மூலமாக தூண்டுகிறார்கள் என்று ஆங்கிலேய போலீஸ்கார்ரகள் நாடகமேடை அருகே காத்திருந்து முருகனாக நடித்த தியாகி விஸ்வநாத தாஸை 19 முறை நாடகம் நடத்தும்போது கைது செய்திருக்கிறார்கள்.இவையெல்லாம் ஆங்கிலேயனைகோபமூட்டியது
மகாகவி பாரதியை ஏன் ஆங்கிலேயன் கைது செய்ய எத்தணித்தான்?
அவர் ஏன் பாண்டிச்சேரியில் பாரதிதாசன் பாதுகாப்பில் வாழ்ந்துகொண்டு பத்திரிக்கைகளும் கவிதைகளும் படைத்தான்? அங்கேயும் அவரை ஆங்கிலேயன் ஏன் தேடினான்? காரணம்,அவன் படைப்புகள் அவர்களை நாட்டைவிட்டு விரட்டும் வெடிகுண்டுகளைவிட வீரியமாகிப்போனது..
1989 ஜனவரி 2ல் டெல்லி மாநகரில் பகலில் ஆட்சியரின் அராஜகத்திற்கெதிராக ‘ஹல்லாபோல்’ உரக்க முழங்கு’ நாடகம்
நிகழ்த்தியபோது மக்களை ஈர்த்த பேராசிரியர் ஷப்தர் ஹஷ்மியை அன்றைய ஆட்சியாளர்களின் குண்டர்கள் ஏன் பட்டப் பகலில் அடித்துக்கொலை செய்தார்கள்?காரணம்,அந்த நாடக கலைஆதிக்கங்கொண்டு தொழிலாளர்களை மிதித்த முதலாளிகளையும் அவர்களுக்கு துணைநின்ற ஆளுவோர்களையும் அதிரச்செய்த து.
‘ மாட்டு வண்டி போகாத இடங்களில்கூட எங்கள் பாட்டு வண்டி போனது’என்று இசை இயக்குனர் கங்கை அமரன் சொல்கிறார். அண்ணன் பாவலர்வரதராஜன்,தம்பிகள் இளையராஜா(இசைஞானி) கங்கை அமரன், பாஸகர் ஆகியோர் தமிழகத்தின் வீதிவீதியாக மக்கள் பிரச்னைகளை தங்களது கம்பீர இசையில் சுமந்துகொண்டு ஒரு மிகப் பெரிய சமூக கடமையாற்றி மக்களை இயக்கரீதியாக இணைத்த ரகசியம் என்ன ?ஏதுமற்ற ஏழை ஜனங்கள்பக்கம் நின்று,
‘ஆண்டவனே சர்வே போட்டு அளந்து விட்டானா?-இல்லே
அவனவனா நிலத்தையெல்லாம் அமுக்கிகிட்டானா?’என்று பாடி ஜனங்களின் ஏக்கப்பெருமூச்சை இசைப்பாடல்கள்மூலம் வெப்பமாக வெளிப்படுத்தியதால்தான்.
’அரும்பும் வேர்வை புவிமேல் உதிர்த்து ஆயிரம் தொழில்கள் செய்திடுவீரே.பெரும்புகழ் நுமக்கே இசைக்கின்றேன்.பிரம்மதேவன் கலையிங்கே நீரே!’ என்று உழைப்பாளரை பிரம்மா என்று சொன்ன பாரதி,மூடநம்பிக்கையின் நாற்றத்தைச் சாடிய பாரதிதாசன், உழைப்பின் வேர்வையை பாமரத் தமிழில் திரையில் பாடி 29 வயதில் பூமியில் இலக்கிய உரமாகிப்போனபட்டுக்கோட்டையார், சுசீந்திரம் கோவிலிலே தாழ்த்தப்பட்டோரைகோவிலில் நுழைவதைத் தடுத்த சாதிவெறி தெருமறிச்சான் தீண்டாமைச் சுவரை இடித்துவிட்டு அந்த மக்களை இழுத்துக் கொண்டு ‘வழிவிடுவீர்! வழிவிடுவீர்!’ என்ற பாடலைப் பாடிக்கொண்டே நுழைந்த இலக்கிய ஆசானும் கோவை ஸ்டேன்ஸ் மில்லின் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது ‘காலுக்கு செறுப்புமில்லை கால்வயித்துக் கூழுமில்லை பாழுக்கு உழைத்தோமடா- என் தோழனே
பசையற்றுப் போனோமடா’ என்ற பாடல் கலந்த பேச்சு பாடலை
தொழிலாளர்களை உத்வேகப்படுத்தி ஆலை முதலாளிகளை பணியவைத்த ஆயுதங்களாக்கி தொழிலாளர்களுக்கு வெற்றியைக் கொடுத்த ஜீவா ஆகியோர் அமைத்த கலை இலக்கியத் தடம் வீரியமும் விவேகமுங்கொண்டது.இப்படிப்பட்ட அமைப்பில் கலைஇலக்கியக் கரமிணைத்துக்கொண்டிருக்கும் அத்தனை உறுப்பினர்களும் பிரதிநிதிகளும் பெருமைக்குறியவர்கள
III. மாவட்ட வரலாறும் இலக்கியமும்
கன்னயாகுமரி மாவட்ட வரலாறை பலர் அவரவர் கோணங்களிலிருந்து வெளிவந்துள்ள படைப்புகளிலிருந்து தொகுத்து செழுமைப் படுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. டாக்டர் அ.கா.பெருமாளின் ‘தென்குமரியின் கதை’,திருமதி விசாலம் படைத்துள்ள தன்வரலாற்று நாவல் ‘மெல்லக் கனவாய் பழங்கதையாய்’ நாஞ்சில் நாடனின் ‘குமரி மாவட்ட வெள்ளாளர் வாழ்க்கை வரலாறு’, நாவலாசிரியர் பொன்னீலனின் ‘புதிய தரிசனங்கள்’, ‘மறுபக்கம்’ திருமதி ஜாய் ஞானதாசன் படைத்த ‘ஒரு மறக்கப் பட்ட வரலாறு’,டி பீட்டர் ,ஐ வி பீட்டர் எழுதியுள்ள ‘சமயத் தொண்டர்களும்,சமூகத் தீர்திருத்தமும’ பேரா.வறீதையா எழுதியுள்ள நெய்தல் சுவடுகள்’ புலவர் கு.பச்சைமால் எழுதிய ‘குமரி மாவட்டம் பிறந்த வரலாறு’ இஸ்லாம் பகுதியிலிருந்து வெளியாகி உள்ள ‘பெட்டகம்’ கத்தோலிக்க சர்ச்சுகளின் வரலாறு’ என்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘குமரி கடலின் புயற்பறவை’ அகியவற்றை ஆய்வு செய்து முழுமையான பொக்கிஷமாக மாற்றவேண்டியதும்,உண்மை வரலாறை மக்களின் மனதில் பதிக்கவைக்க வேண்டியுள்ளது.வரலாற்றுப் பார்வை கொண்ட முற்போக்குவாதிகள் புதிய பரந்த சமூகம் கட்டமைக்க வரலாற்றை கூர்மையாகப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
IV நம்மைச் சுற்றி கலை இலக்கிய களம்
4.1 தொலைக்காட்சி தொலைக்காட்சியில் வருகின்ற பல தொடர்கள் மத்தியதர மக்களை மையமாக வைத்தே காட்சிப் படுத்தப்படுகின்றன. அதுவும் உண்மைக்கு புறம்பான கட்டமைப்பை உருவாக்குகின்றன.
பெண்ணுரிமை உரக்க முழங்கும் இக்காலகட்டத்தில் இதை ஊதிப் பெருக்குவதற்குப் பதிலாக,பெண்களை வில்லிகளாக சித்தரித்து, ஆண்களினத்திற்கு எதிராக நிறுத்தும் கருத்தோட்டத் தொடர்கள் வருகின்றன.சில தொலைக் காட்சி அலைவரிசைகள் திரைப்படப்பாடல்களில் போட்டிநடத்தியே காலத்தை இட்டு நிரப்புகின்றன. விஜய் டி வியில் ‘நீயா நானா?’ பகுதியில் வெளியிடப்படும் படைப்புகளும் விவாதங்களும், உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனமான சி என் ஆர் திட்டமிட்டு சமூக விழிப்புணர்வு கருத்துகளை வாதமா விவாதமா?’, கலந்துரையாடல்,குழந்தைப் பாடல்கள் பரப்பும் விதம் கலை இலக்கிய உலகுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைகிறது.
பன்னாட்டுக வர்த்தக நிறுவனங்கள், உள்நாட்டு பெரும் நிறுவனங்கள்
தொலைக்காட்சித் தொடர்களுக்குத் தாராளமாக விளம்பரம்,நிதியுதவி செய்து வருகின்றன.இவ்வகை நிறுவனங்களின் உதவிகளால் தொலைக்காட்சிகள் இயங்குவதால் மாற்றுக் கருத்துகளூக்கோ, ஆரோக்கியமான தொடர்களுக்கோ சமூகத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கோ இடம் இருக்காது என்பது தெளிவு.தனது உற்பத்திக்கு ஏற்றவாறு நுகர்வு மோகத்தைத் தூண்டி சந்தையை வடிவமைப்பதும்,மாற்றுக் கருத்துகளற்ற தட்டையான தொலக்காட்சிப் பார்வயாளர்களின் வழியாக உலகமயத்தை, தாராளமயமாக்கலை பரவலாக்கவுமே வர்த்தக நிறுவனங்கள் தொலைக்காட்சிகளுக்கு உதவுகின்றன என்று கருத முடியும்.
4.2 திரைப்படங்கள் வீடுகள்தோறும் தொலைக்காட்சிப் பெட்டி வந்தபிறகு பெரியதிரை தட்டுத்தடுமாறுகின்ற கவலை ஒருபுறம் இருக்கிறது.வெளிவருகின்ற ஏராளமான திரைப்படங்கள் மக்களின் வாழ்க்கையோடு ஒட்டாமல் குதியாட்டம் போடுவது இன்னொருபுறம்.
இதையும் மீறி மனிதநேயப்பண்புகளைக் கொண்ட சில படங்கள் வந்தாலும் மக்களிடம் வரவேற்பில்லாமல் முதலுக்கே மோசமாகும் நிலையும் இருப்பது மறுப்பதற்கில்லை. 2008ல் வெளியான115 படங்களில் 11 படங்களே மக்களைப் பேசின.இந்தப் பதினொன்றில்
‘பூ’ ,’அபியும் நானும்’ படங்கள் த மு எ க ச விருது வழங்கி கெளரவித்தது. த மு எ க ச பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய
கதையே என்பது மிகப்பெருமை.சிறந்த கதாசிரியர் விருதும் தமிழக அரசு வழங்கியது அதைவிடப் பெருமையானது. 2009ல் வெளியான131 படங்களில் பேராண்மை, நாடோடிகள்,பசங்க,வெண்ணிலா கபடிக்குழு, மாயாண்டி குடும்பத்தார், ஆகியனவும், 2010ல் வெளியான 144 படங்களில் அங்காடித்தெரு,களவாணி,மதராசபட்டிணம், மைனா,தென்மேற்கு பருவகாற்று,நந்தலாலா, இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்,நெல்லு,
அவள் பெயர் தமிழச்சி,ஆகியவை மட்டும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனச் சொல்லலாம்.கோடிக்கணக்கில் முதல்முடக்கினாலும் மக்களின்
சிந்தனையை உயர்த்த எந்த அளவு பயன் அடைகிறது என்பது சிந்திக்க
வேண்டிய ஒன்று.இதற்கு இயக்குநர்களின் ,தயாரிப்பாளர்களின் சமூக
சிந்தனை மட்டத்தைப் பொறுத்ததேயாகும். படங்களில் அமைகின்ற
பாடல் வரிகளைப் பற்றி ரசிகர்கள் பொருட்படுத்தாமல் இசைக்கு மட்டுமே தலையாட்டுவதும் நடனமாடுவதும் பார்க்கமுடிகிறது.
4.3 நாவல் இலக்கியம்
நாவல் இலக்கிய உலகம் விரிவடைந்து வருகிறது. அச்சு தொழிலில் ஏற்பட்ட முன்னேற்றம் இதன் விசையை வேகப்படுத்தியிருக்கிறது.சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ பொன்னீலனின் ‘மறுபக்கம்’ தேனி சீருடையானின் ‘நிறங்களின் உலகம்’ இமையம் எழுதிய ‘செடல்’ ச.பாலமுருகனின் ‘சோளகர்தொட்டி’ தலித் அருந்ததியர் வாழ்வைச் சொன்ன பாண்டியக்கண்ணனின் ‘சலவான்’ பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’யும் காமுத்துரையின் ‘மில்’ நாவலும், திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்களை மையப்படுத்தி படைக்கப்பட்டுள்ள டி.செல்வராஜின் ‘தோல்’ ஆகியன பொதுத் தளத்தில் ஏராளம் நாவல்கள் வந்திருந்தாலும் இந்த நாவல்கள் பேசப் படக்கூடிய விவாதிக்கப் படவேண்டிய நாவல்கள் ஆகும்.
4.4 கவிதை வெளி
இலக்கிய உலகில் கவிதை படைப்பே அதிகம்.இளைஞர்கள் பெரும்பாலும் கவிதை மூலமே இலக்கியத்தளத்தில் பிரசவம் ஆகிறார்கள்.பல கவிஞர்கள் காதல் கவிதைகள் மூலம் காலடி எடுத்து வைத்து மெள்ள மெள்ள சமூகத்தில் பயணப்பட ஆரம்பித்து,பின் சிறுகதைவெளியில் ,பின்பு நாவல்வெளிக்கு வருகின்ற பரிணாமம் அடைகிறார்கள்.
புதுக்கவிதை, மரபுக்கவிதை ஆகிய இரண்டிலும் உள்ளடக்கம் கலாபூர்வமாக மனிதனைப் பேசுமானால், வாசகனைத் தட்டி எழுப்புமானால் அது கவிதையே.உருவம் எதுவானாலும் உள்ளடக்கம் மக்களுக்குச் சொந்தமானதாக இருக்கவேண்டும்.காரணம் மக்களிடமிருந்து பெறப்பட்டதே கவிதைக்கரு.வள்ளுவத்திலிருந்து துவங்கி சித்தர்கள் காலம் முதல் தொடர்ந்த கவிதை உலகம் மிக ஆழமானது, விசாலமானது.பாரதி,பாரதிதாசன்,பட்டுக்கோட்டையார்
கவிதை ஏர்பூட்டிய தடத்தில் ஏராளமானோர் கவி வெளியில் கவிஏரைப்
பின்தொடர்கிறார்கள்.
4.5 சிறுகதை இலக்கியம்
தன் அனுபவத்தை,உணர்வை சுமந்து வாசகனிடம் சிறு
அதிர்வை,சிந்தனையை கொண்டுசெல்லும் வாகனமே சிறுகதை.
தொடங்குமிடம்,தொடரும்பாணி,முடிக்குமிடம் ஆகியவைகளே காரணிகள். இவற்றைத் தாங்கி ஏராளமான சிறுகதை ஜாம்பவான்கள்
இலக்கிய வானில் சிறகடித்துப் பறக்கிறார்கள். ஆனால் வாசகனை அதிகம் திணரடித்து பூடகமாக கருவை உள்ளடக்கி வைத்துக்கொண்டு
வெளிப்படுத்தும் அதிநவீனப்பாணியும் உலா வரத்தான் செய்கின்றன.
4.6 இசைப்பாடல் இலக்கியம்
மக்கள் இயக்கங்களின்மீது அழுத்தமான நம்பிக்கை கொண்டவர்கள் மக்களை ஈர்த்து சிந்தனையை விதைக்க இசை வாகனத்தைப் பயன்படுத்தும் கவிஞர்கள்,பாடகர்கள் த மு எ க ச வில்
அதிகமாக உள்ளனர்.வெகுஜனங்களை அதிகமாக சென்றடையும் கலை இலக்கியம் இதுவே.ரசணையைக் கொடுத்து கருத்துகளை கேடகவைக்கும் சக்தி இசைப்பாடலுக்கு உண்டு. மக்கள் மத்தியில் திரையிசைப் பாடல்களும் பக்திப் பாடல்களும் மட்டுமே மக்களிடம் பவணி வருகிறது. மக்கள் கருத்துகளை செவிமடுப்பதே இல்லை.நல்லவை அல்லவை பற்றி அறிவுஜீவிகள் கூட பேசுவதில்லை.பட்டிமன்றங்களில் மட்டும் விவாதப் பொருளாகி நிற்கிறது. இசைப்பாடல் பற்றி விவாதத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும். மின்னனு சாதனங்கள் வளர்ச்சியடைந்த காரணத்தால் இசைப்பாடல் தொகுப்பு நூல்கள் மிகக் குறைவாகவே
வெளிவந்திருக்கின்றன. புதுகை வெற்றிநிலவன்,நவகவி,வையம்பட்டி
முத்துசசாமி ஆகியோர் வெளியிட்டிருக்கிறார்கள்.தன்னார்வ அமைப்புகள் தொகுப்பு போட்டிருக்கிறார்கள் ஆனால் பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயர்கள் போடுவதில்லை.இக்குறையை கோவளம் ஜெ.வெணிஸ் போக்கும் விதத்தில் கவிஞர்களின் பெயர்களோடு ‘மண்ணின் தாகம் ‘பாடல் தொகுப்பு வெளிட்டுள்ளார்.இந்த வெளியீடும் தொடர வேண்டும்.
4 .7 மேடை நாடகம் மேடை நாடகங்கள் சமீப காலமாக குறைந்துவருகின்றன. மக்களும் இயந்திரகதியான சூழலில் வாழ்ந்து வருவதால் நேரத்தை திருவிழா காலங்களில்கூட செலவழிக்க முடியவில்லை.பிரளயன்.ச.முருகபூபதி, ஆகியோர் நாடகத்தை தொடர்கிறார்கள்.கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில் கொடைகாலங்களில் அமெச்சூர் நாடகங்கள் அதிகம் அரங்கேறுகின்றன. அதில் சமூக சிந்தனையை செலுத்தி வெற்றிகண்டவர் கலைமுதுமணி இரணியல் கலைத்தோழன் நமது உறுப்பினர் என்பது நமக்குப் பெருமையே.
4.8 கிராமியக் கலை மக்களின் வாழ்க்கையின் நெருக்கமாக இருக்கும் கலை மக்களைப்பற்றியேபேசும்கலை.வில்லுப்பாட்டு,கணியான்கூத்து,களியல்நடனம் போன்றவை கோவில் சார்ந்தவைகளாகவே இருக்கின்றன. பொதுவிழாக்களில் இக்கலைகளைப் பயன்படுத்துவது மிக மிகக் குறைவே.த மு எ க ச மேடைகளில் அதிகம் பயனபடுத்தும் அளவு கிராமியக் கலைக்குழுக்களான நாகர்கோவில் களரி கிராமியக் கலைத் தொடர்பகம், நாகர்கோவில் முரசு கலைக் குழுமம், திண்டுக்கல் சக்தி கலைக் குழு பாப்பம்பாடி ஜமா ஆகியன கிராமியக் கலையை இன்னும் உயிர்ப்பிக்கிறார்கள். காலங்காலமாக கிராமியக் கலைகளைப் பயன்படுத்தும் கலைஞர்களோடு இன்னும் முழுமையாக நமது இயக்கத்தினர் கரங்கோர்க்காமல் இருப்பது மிகக்குறையே.கிராமியக் கலைஞர்களோடு நெருங்கி சமூக உள்ளடக்கத்தை விவாதித்து இயக்கினால் மக்களிடம் உயிரோட்டமாக கிராமியக் கலையை வளர்க்கமுடியும்.
4.9 இணையத் தளத்தில் இலக்கியப் பகிர்வு உலக அளவு வாழ்கின்ற தமிழர்கள் தங்களின் இலக்கிய தாகத்தை பரிமாறும் அளவுக்கு வளர்ந்துள்ளது.கீற்று டாட் காம் மூலமாக ஏராளமானஇலக்கிய இதழ்களை வாசிக்க முடியும். வாசகர்கள் கருத்தைகளை விமர்சனங்களை உடனுக்குடன் அனுப்ப முடியும்.மாதவராஜின் தீராத பக்கங்கள் மிக தரமான இலக்கியப் பகிர்வு அளிக்கிறது.குறும் படங்கள்,கதைகள்,கவிதைகள் ஆகியவை ஏராளமானோர் படைக்கிறார்கள்.
பெரும்பாலும் இளையவர்களே பதிவர்களாக இருக்கிறார்கள்.முகநூல் என்பது ஏராளமான நட்பு வட்டங்களை உருவாக்கிக் கொண்டு கருத்துகளை
பேசிக்கொள்ளலாம். இதில் பதிவு செய்பவர்கள் அரசியலிலும் விவாதிக்கிறார்கள்.தரமில்லாத பதிவுகளும் பல வருகின்றன.
4.10 சிற்றிதழ்கள் ஒர் அறிமுகம்
4.10.1.புதிய ஆசிரியன்; தமிழகமெங்கும் கல்விச்சூழல் குறித்தும் அரசியல் பொருளாதாரம் அறிவியல் சார்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்தும் இதழாகும்.
.4.10.2.தீராநதி; இலக்கிய ஜாம்பவான்களின் படைப்புகளே மிக அதிகம். குமுதம் வெளியிடும் மாதாந்திர வெளியீடே இது.பல விதமான இலக்கியப்போக்கு உள்ளோர்களின் படைப்புகளை வெளியிட்டு விவாதத்திற்கு விடுகிறது.
4.10.3.திசை எட்டும்; மொழியாக்க காலாண்டிதழாக,மொழி பெயர்ப்பு இலக்கிய விமர்சகர் குறிஞ்சி வேலனின் வெளியீட்டில் வந்து கொண்டிருக்கிறது.
4.10.4..புது எழுத்து; நவீன படைப்பிலக்கியத்திற்கான சிறு பத்திரிக்கை என்ற அடையாளத்தோடு மனோண்மணியை ஆசிரியராகக்கொண்டுள்ளது. ஏகாதிபத்தித்தின் ஊடுருவல்,காரப்பரேட் கிரிமினல்களின் வாழ்க்கைத் தத்துவம் பெரும்பான்மை மக்களை சுரண்டுவதுதான் என சரியாகவே குறிப்பிடுகிறது ஒரு கட்டுரையில்.
4.10.5..செம்மலர்; இடதுசாரி அரசியல் பின்புலத்தோடு மக்களின் வாழ்க்கையை நேசித்து, சோசலிச எதார்த்தவாத இலக்கியக் கொள்கையை அடித்தளமாக வைத்துக் கொண்டு, கலை இலக்கிய அரசியல்,விஞ்ஞானம் ஆகிய தளங்களில் கால்பதித்துக்கொண்டு ,வாசகர்களை எவ்வித குழப்பத்திலும், மயக்கத்திலும் ஆழ்த்தாமல் படைப்புகள் சஞ்சரிக்கின்றன.கதைகள்,கவிதை,கட்டுரை ,நூல் அறிமுகம் ஆகியன வெளிவருகின்றன.
4.10.6 தாமரை மக்கள் கவிஞன் ஜீவானந்தம் ஆரம்பித்த இடதுசாரி அரசியல் தளத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது தாமரை மாத இதழ்.புதுப்படைப்புகளின் ஆய்வு, நூல் அறிமுகம், இலக்கியக் கட்டுரைகள் ஆகியவை இடம் பெறுகின்றன.
4.10.7..மாற்றுக்கருத்து அதிதீவர இடதுசாரி அரசியலை முன்னிறுத்தி இருமாத இதழாக வெளிவருகிறது.
4.10.8.புதிய கோடாங்கி, இது பெரிய எழுத்து, தலித் முரசு ஆகிய இதழ்கள் ,ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை ஏக்கப்பெருமூச்சுகளை கட்டுரைகளாக,கதைகளாக,கவிதைகளாக, வெளிப்படுத்துகின்றன.
4.10.9.பெரியார் முழக்கம்; பெரியார் திராவிட கழகம் அமைப்பின் சார்பில் வெளிவரும் மாத இதழாகும்.
4.10.10.உண்மை திராவிட கழகத்தின் மாத இதழாக வந்து கொண்டிருக்கிறது. மூடநம்பிக்கையைச் சாடியும்,சமூக விழிப்புணர்வு படைப்புகளை தாங்கியும் வருகிறது.
4.10.11 புதுவிசை சம்பு ஆசிரியராகவும்,த மு எ க ச இணைப்பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்பாசிரியராகவும் கொண்டு வெளிவரும் காலாண்டிதழ்.சமூக அரசியல் கலை இலக்கியம் குறித்த கருத்துகளை எதார்த்தமாக பொதுத் தளத்தில் விவாதிப்பதோடு, கணிசமான விகிதாச்சாரம் தலித் மக்களின் வாழ்வினை அவர்கள் குரலை பிரசவிப்பது சிறப்பம்சம்.
4.10.12. உயிர் எழுத்து பொதுவான அரசியல் பொருளாதார விஷயங்களை ஆய்வு செயவதாகவே அமைகிறது.
4.10.13 .புதிய புத்தகம் பேசுது சென்னை பாரதி புத்தகாலயம் வெளியிடுகிற மாத இதழ்.அறிவார்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் ,பேட்டிகள் மூலமும்,நூல் அறிமுகம் மூலமும் வாசகர்களுக்கு வழிகாட்டும் சிறந்த ஆசானாக விளங்குகிறது.
4.10.14 .மணல் வீடு; ஹரிகிருஷ்ணனை ஆசிரியராகக் கொண்டு இருமாத இதழாக வெளிவருகிறது.
4.10.15 காலச்சுவடு புத்தகம் நல்ல கட்டமைப்போடு வருகறது.பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் பெரும்பாலோருக்கு வாய்ப்பளிக்கும் இதழாக உள்ளது.
4.10.16.மந்திரச்சிமிழ் திரு.க.செண்பகநாதனை ஆசிரியராகக் கொண்டு சென்னையிலிருந்து வெளிவரும் இதழ் இது.
4.10.17 வடக்கு வாசல், தமிழினி .புதுப்பூம்புனல் ஆகிய இதழ்களும் மாத இதழ்களாக வந்துகொண்டிருக்கின்றன.
V. த மு எ க ச குமரி மாவட்ட செயல் அறிக்கை
5.1.1 உறுப்பினர் பதிவு விபரம்;
மாவட்ட அளவு உறுப்பினர் சேர்ப்பு
2009 725 2010 1000 2011 900
5.1.2 கிளைகள் விபரம்; .சின்னமுட்டம், கோவளம் கன்னியாகுமரி, கொட்டாரம், நாகர்கோவில், தக்கலை, கண்டன்விளை, நேசமணி நகர், போக்குவரத்துக்கிளை, வெள்ளிச்சந்தை, மணலிக்கரை,மார்த்தாண்டம்,
குலசேகரம் ,திருநந்திக்கரை ,பொன்மனை,மேல்புறம், பாகோடு ,பரக்குன்று , மருதங்கோடு ,திக்குறிச்சி, மஞ்சாலுமூடு,பூட்டேற்றி, கருங்கல்
,மிடாலக்காடு ,முள்ளங்கிணாவிளை ,முஞ்சிறை, சிதறால், திருவட்டார்,
இலக்குமிபுரம் கல்லூரிக்கிளை ,தேமானூர், குழித்துறை
5.1.3 மாவட்டக்குழு கூட்டங்கள் கடந்த மாநில மாநாட்டுக்குப் பிறகு 23கூட்டங்கள் நடந்தேறியுள்ளது. மொத்தமுள்ள 34 உறுப்பினர்களில் இக்கூட்டங்களில் சிலரைத் தவிர உறுப்பினர்கள் கலந்து உள்ளனர். சராசரியாக பங்கு கொண்டோர் 50 சதவீதமாகும். மாவட்டக்குழு கூட்டங்களில் ஒவ்வொரு கூட்டத்திலும் இலக்கியக்கட்டுரை தயாரித்து, இலக்கியவிவாதக்கூட்டமாக நடத்தவேண்டும் என்ற முறையில் 28-6-2009 அன்று “மதமும் அரசியலும் “ தலைப்பில் தோழர்.ஜெயகாந்தனும், 26-7-2009 அன்று “கல்வியின் நிலையும் கபில்சிபல் அறிக்கையும்“ தலைப்பிலும்,13-9-2009 அன்று “ காலந்தோறும் தமிழ்மொழி இலக்கிய உருவ உள்ளடக்கப்பார்வையில் “ தலைப்பிலும் பேரா.க.கணேசனும் கட்டுரை சமர்ப்பித்தனர்.விவாதம் நடைபெற்றது.
5.1.4 படைப்பர்ளிகளின் பங்களிப்பு 2009 முதல் 2011 வரை
| வரிசை எண் | படைப்பின் பெயர் | படைப்பின் வகை | படைப்பாளி |
| 1 | விடியல் முழக்கம் 2 | கவிதை | சூசை மைக்கேல் |
| 2` | புனித தாமஸ் மூர் | வரலாற்று நாவல் | குமரித்தோழன் |
| 3. | விடியல் தேடும் விதிகள் | கவிதை நூல் | குமரித்தோழன் |
| 4 | மரப்புலி | நாவல் | குமரித்தோழன் |
| 5 | தூய மரிய ஜான் வியானி | நாவல் | குமரித்தோழன் |
| 6 | விடை தேடிப் புறப்படுவோம் | கவிதைத் தொகுப்பு | மணவை அமீன் |
| 7 | எங்கள் வானம் | இசை குறுந்தகடு | ஜே.பி வெணிஸ் |
| 8 | நிலவே | இசைக்குறிந்தகடு | ஜே.பி வெணிஸ் |
| 9. | மண்ணின் தாகம் | இசைப்பாடல் தொகுப்பு | ஜே.பி.வெணிஸ் |
| 10 | நெருப்பில் நீராடும் மலர்கள் | நாடக நூல் | இரணியல் கலைத்தோழன் |
| 11 | இரும்புக காகத்தின் கதை | கவிதைநூல் | கலாசுரன் |
| 12 | புன்னகைப்பூவே | சிறுகதை தொகுப்பு | கவிஞர் ஜான் ஜோசப் |
| 13 | வகுப்பு | குறும்படம் | பளீஸ்து,கன்னியாகுமரி |
| 14 | இளையோர் 2012 | ஆவணப்படம் | உருவங்கள் மணலிக்கரை கிளை |
| 15 | மீசைவீடு | சிறுகதைத் தொகுப்பு | குழித்துறை ஜெபமணி |
5.1.5 உறுப்பினர்களின் தனியான படைப்புகள் வெளிவந்த விபரம்
எண் படைப்பு தலைப்பு வெளியிட்ட இதழ் படைப்பாளி
| 1
2
3
4
5
6
7 | 1தலித்தியம்
2.காலந்தோறும் தமிழ் 3.சமூகநீதிக்கான உயர்கல்வி-ஒருஅடித்தட்டுப்பார்வை.
4.கலை இலக்கியம் என்பது 5 வீர வரலாற்றை விலை பேசலாமா? 6.சுயநிதிக்கல்லூரி
7.செருப்பாபிஷேகம் | கேரளா தமிழ் எழுத்தாளர் சங்க சிறப்பு மலர் கட்டுரை திரு.முத்துராமன் மணிவிழா சிறப்பிதழ் மூட்டா மாநாட்டு சிறப்பிதழ்கட்டுரை
ஏதிர்நீச்சல் இதழ் கட்டுரை இசைப்பாடல்கள் மூட்டா இதழ் புதிய ஆசிரியன் சிறுகதை வண்ணக்கதிர் |
பேரா.க.கணேசன் ‘
‘ |
| 8 | அனுமன் சிலையானான் | சிறுகதை உண்மை இதழில் | கு.சந்திரன் |
| 9 | கட்டணம் | சிறுகதை தினமணிக்கதிர் | மிக்கேல்ராஜ் |
| 10 | அயோத்தி தீர்ப்பு | கட்டுரை எதிர்நீச்சல் | ஜெ.ஜெயகாந்தன் |
| 11 | மதமும் அரசியலும்
| கட்டுரை எதிர்நீச்சல் இதழ் | ஜெ.ஜெயகாந்தன் |
| 12 13
14 | ஐ டி வேலை மீன் வியாபாரியின் மகன்
யார் குற்றவாளி? | தினமணிக்கதிர் தினமணிக்கதிர் சிறுகதை உண்மை இதழ் சிறுகதை
| மிக்கேல்ராஜ் மிக்கேல்ராஜ்
கு.சந்திரன் |
5.1.6 எதிர்நீச்சல் இதழ்
‘எதிர்நீச்சல்’ காலாண்டித.ழ் மணலிக்கரை கிளை நடத்தினாலும் த மு எ க ச வுக்கென்று மாவட்ட முழுக்க அதன் வீச்சைப் பரப்பவேண்டுயுள்ளது.புதிய படைப்பாளர்களை உற்சாகப்படுத்துவதைக் குறிக்கோளாக வைத்துள்ள இவ்விதழ் தரமான படைப்புகளோடு வந்து கொண்டிருக்கிறது. நவரசன், கலாசுரன்,மணவைஅமீன, தை.லாசர்,ஆர்.பெமிலா, முனைவர் கணேசன்,.அ.கிறிஸ்டோபர், புலவன்விளை அஜி(ஜான் இளங்கோ) ஜே.எம்.ஹசன், கு.சந்திரன்,ஞா.எலியாசு, தொ.ஜான்பிரைட்,எஸ்.ஜெபாஸ்டின், ஜான்சன்,ஜெயகாந்தன், மத்தியாஸ், மார்த்தாண்டம் பாபு, ஜான் ஜோசப் ,தா.சிங்காராயன் ஆகியோர் படைப்புப்
பங்களிப்பு செய்கிறார்கள்.மாவட்ட முழுக்க பரவலாக்க மாவட்டக் குழு தீர்மானித்துள்ளது.
5.1.7 பயிற்சி முகாம்கள்
மார்ச் 8, 2009ந்தேதி மார்த்தாண்டம் மதிலகத்தில் மார்த்தாண்டம் கிளை
மாவட்டக்குழு உறுப்பினர்களடங்கிய 34 பேருக்கு ”அமைப்பு ஆளுமை”
ஒருநாள் பயிற்சிமுகாம் நடத்தியது. தோழர் முகில் பயிற்சி வழங்கினார்.
தக்கலை கிளைசார்பில் இலக்குமிபுரம் கலை அறிவியல் கல்லூரியில்
மாணவர்களுக்கு ஆளுமைப்பயிற்சி நடத்தியது. திரு. பிரைட்சிங்
பயிற்சியளித்தார்.
5.1.8 . மாணவர் அறிவியல் கலை விழா 2009
ஆகஸ்ட் 22 ,2009 அன்று த மு எ க சவும்,தமிழ்நாடு அறிவியல் இயக்கமும்,மாவட்டப்பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து நாகர்கோவில், தக்கலை, குழித்துறை ஆகிய கல்விமாவட்ட அளவில் மாணவர் அறிவியல் கலை விழா 2009 நடத்தி உயர்நிலை,நடுநிலைமேல்நிலை, கல்லூரி ஆகிய நிலைகளில், பேச்சு,விழிப்புணர்வுப்பாடல்,வீதிநாடகம்,கிராமியநடனம், செய்திவாசித்தல், புகைப்படம் எடுத்தல்,குமரி மாவட்டவரலாற்று ஆல்பம் தயாரித்தல்,சிறுகதை,ஓவியம்ஆகியவற்றில்போட்டிகள்நடத்தப்பட்டன. இவ்விழாவில் 2000 மாணவர்கள்ப்ங்கேற்றனர்
மேற்கண்டபோட்டிகளில்முதல்மூன்றுபரிசுகளைவென்றோர்க்கு இறுதிப்போட்டியும்,பரிசளிப்பு, மற்றும் நிறைவுவிழாவும் செப்டம்பர் 29 அன்று மாவட்ட மாணவர் கலை அறிவியல்விழா நடத்தப்பட்டது.இவ்விழாவில் மாவட்டக்கல்வி அதிகாரி திரு பொன்னையா கலந்துகொண்டார்.
5.1.9 . நூல் விற்பனை
‘்செம்மொழி தமிழுக்குச் செய்யவேண்டியது என்ன?’ மாநிலப் பிரசுரம் 3000 அனுப்பப் பட்டதில் கோவை மாநாட்டுக்கு முன் 600 புத்தகங்கள் மட்டும் மக்களிடம் விநியோகிக்கப்பட்டது.மீதமிருந்த புத்தகங்களை பௌர்ணமி கலைவிழாக்களின்போது மக்களிடம் இலவசமாக வழங்கப் பட்டது. செப்டம்பர் 26 அன்று புதுக்கடை கிளை சார்பில் புத்தக விற்பனை இயக்கம் நடைபெற்றது.இதில்ரூ.3000க்கு விற்பனை செய்யப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெ.ஜெயகுமார்,ரோஸ்ராபின் இருவரும் ரூ31000க்கு விற்பனை செய்தனர்’.புதிய புத்தகம் பேசுது’ சந்தாதாரர்களை சேர்த்துக்கொடுத்தனர்.
5.1.10 திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் முத்துராமனின் மணிவிழா கருத்தரங்கில் பங்கேற்பு:
30-9-2009அன்று திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கச் செயலாளர் முத்துராமனின் மணிவிழா ”காலந்தோறும் தமிழ்மொழி இனம்”என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் மாவ்ட்டட்ச்செயலாளர் பேரா.கணேசன் காலந்தோறும் தமிழ்மொழி இனம்-இலக்கியப்பார்வையில் எனும் தலைப்பில் தலைமை தாங்கி கட்டுரை சமர்ப்பித்தார்.விழாவில் முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன், பழ.நெடுமாறன் ஆகியோர் சிறப்பு கருத்தாளர்களாக பங்கேற்றனர்
5.1.11 கேரளா தமிழ் எழுத்தாளர்கள் சங்க மாநில மாநாட்டில் த மு எ க ச
2010 டிசம்பர் 18ல் கேரள தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடைபெற்றது .மாவட்டச் செயலாளர் த மு எ க ச மாநிலச் செயற்குழு உறுப்பினர் கவிஞர் அ.வெண்ணிலா, பெண்ணியம் தலைப்பிலும், முனைவர் க.கணேசன் தலித்தியம் தலைப்பிலும் கட்டுரை சமர்ப்பித்து பேசினர். த மு எ க ச விற்கும், கேரள முற்போக்கு கலை இலக்கியச் சங்கத்திற்கும், கேரள தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்குமிடையே ஆரோக்கியமான, இணக்கமான உறவு தொடர்வதில் பெருமை கொள்கிறோம்..
5 .1.12 ஜூலை 16 அன்று கும்பகோணக்கொடூரத் தீ விபத்து நினைவுநாள்:
ஜூலை 16 அன்று கும்பகோணக்கொடூரத் தீ விபத்துக்குள்ளான பள்ளிச
சிறுவர்களின் நினைவு நாள் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நினைவுத்தட்டி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
போக்குவரத்துக்கிளை சார்பில் ராணித்தோட்ட டிப்போ முன்பு நினைவுத்தட்டி வைத்தும், நேசமணிநகர்க்கிளை பிரதான சாலையில் நினைவுத்தட்டிவைத்தும், மஞ்சாலுமூடு, கருங்கல், மிடாலக்காடு,மார்த்தாண்டம் ஆகிய கிளைகளும் நினைவுத்தட்டி வைத்து அஞ்சலி செலுத்தின. அன்று மாலை மார்த்தாண்டத்தில் நடைபெற்ற சிறப்பு
தீபாஞ்சலி கூட்டத்தில் சோழ நாகராஜன் தான் நேரில் கண்ட காட்சிகளை
வியாபாரக் கல்விச் சூழலோடு பொருத்தி கருத்துரை வழங்கினார்.
5.1.13 பாராளுமன்றத்தில் தமிழ் கோரி ஆர்ப்பாட்டம்
பாராளுமன்றத்தில் தமழில் பேச,நீதிமன்றத்தில் தமிழில் வாதாட சட்டமியற்றவேண்டும் எனக் கோருவதோடு,அங்கீகரிக்கப் பட்ட அனைத்து
மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கும்படி சட்டமியற்றவேண்டுமென்பதை
வலியுறுத்தி மாநிலமெங்கும் த மு எ க ச ஆர்ப்பாட்டம் நடத்தியதன் ஒருபகுதியாக நாகர்கோவில் தபால்நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.எழுத்தாளர் பொன்னீலன்,வழக்கறிஞர்கள் சிலர் இந்திய மாணவர் சங்க தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
5.1.14.மாநில அளவு பயிற்சி முகாம்களில் நிகழ்ச்சிகளிலும்
அ. தேனியில் இலக்கியப் பயிலரங்கில்
மாநில இலக்கிய முகாமில் மாவட்டம் சார்பில் 3 பேர் பங்கேற்பு
செப்டம்பர் 19-21 தேதிகளில் தேனியில் நடைபெற்ற இலக்கியமுகாமில் பேரா.கணேசன்,கு.சந்திரன்,சூசைமைக்கேல்அகிய மூவரும், கல்ந்துகொண்டனர்
ஆ. அம்பேத்கர் சிந்தனைப் பயிலரங்கம்.
செப்டம்பர் 4 முதல் 7 வரை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் த மு எ க ச வும்,அம்பேத்கர் ஆய்வு மையமும் இணைந்து நடத்திய அம்பேத்கர் சிந்தனைப் பயிலரங்கில் இம்மாவட்டத்திலிருந்து மாவட்டக்குழு உறுப்பினர்கள் பேரா.கணேசன்,ஜெ.ஜெயகுமார், குமரித்தோழன், கு.சந்திரன், மத்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இ.மாற்றுத் திரைப்பட பயிலரங்கம்
.அக்டோபர் 22,23,24 தேதிகளில் தென்காசியில் நடைபெறும் திரைப்பட பயலரங்கத்தில் தோழர்கள் அருள் மனோகர், சந்திரன், ஜெயக்குமார், விடியல் குமரேசன், இருதயராஜ், உதயகுமார், ஜான் இளங்கோ, குமரித்தோழன், ஜெயகாந்தன் கலாசுரன் ஆகிய பத்துபேர் கலந்து கொண்டனர்.
ஈ. மதுரையில் முற்போக்கு இலக்கிய பயிற்சி முகாம்
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற முற்போக்கு இலக்கிய முகாமில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் மத்தியாஸ்,குமரித்தோழன் பனிப்புரோன் ஜோசப்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உ. புதுச்சேரியில் இசையருவி நிகழ்ச்சி
ஜனவரி 1,2010அன்று புதுச்சேரி கடற்கரை ஷப்தர் ஹஷ்மி அரங்கில் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை ‘இசையருவி’நிகழ்ச்சி புதுவை ஷப்தர் ஹஷ்மி கலைக்குழு ஒருங்கிணைப்பில் மாநிலமுழுவதும் இருக்கின்ற
த மு எ க ச பாடகர்கள் அனைவரையும் இணைத்து மக்கள்மத்தியில் பாடல்கள் மூலம் விழிப்புணர்வு கொடுத்தனர்.இந்நிகழ்ச்சியில் நமது மாவட்டத்திலிருந்து மாவட்டக்குழு உறுப்பினர் ஜே.பி.வெணிஸ் கலந்து கொண்டார்.
5.1.15 தேரிமேல்விளையில் பெளர்ணமிக்கலைவிழா
அக்டோபர் 3ஆம் தேதிமாலையில்ஈத்தாமொழிதேரிமேல்விளை ஊரில்தமிழ்நாடுமுற்போக்குஎழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், நாகர்கோவில் களரி கிராமிய கலைத்தொடர்புமையமும், மகாத்மாகாந்தி இளைஞர் நற்பணிமன்றமும் இணைந்து பெளர்ணமிக்கலைவிழாநடத்தினர்.விழாவிற்கு திரு.அருணாச்சலவடிவு தலைமை தாங்கினார். திரு.என்.எஸ்.கண்ணன் துவக்கிவைத்து உரையாற்றினார் மகாத்மாகாந்திஇளைஞர்நற்பணி மன்றப்பொறுப்பாளர்கள் மாணிக்கம்,திரு.ராஜசேகர்ஆகியோர்முன்னிலை வகித்தனர். ”களரி” கலைக்குழுவினர்எழுதிய”எரிமலை” கையெழுத்துப்பிரதி இதழை திரு.ராஜமாணிக்கம் வெளியிடகவிஞர் என்.டி.ராஜகுமார் பெற்றுக்கொண்டு வாழ்த்துரையும்,மனிதநேயப் பாடல்களும் பாடி மக்களை உற்சாகமூட்டினார். களரி கலைக்குழுவினர் பறையாட்டம், இசைச்சிற்பம், கும்மி,ஒயில், கம்பத்தாட்டம், கோலாட்டம் ஆகியவற்றின்மூலம் சமூக விழிப்புணர்வுக்கருத்துகளை நயம்பட வழங்கினர். கவிஞர் சந்திரன்,மாவட்டப்பொருளாளர்,கவிஞர் கவிப்பித்தன் ஆகியோர் கதை கதையாம் காரணமாம் என்ற தலைப்பில் கிராமியக்கதைகளை வழங்கினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச்செயலாளர் முனைவர்.க.கணேசன் நிகழ்ச்சிகளைத்தொகுத்து வழங்கினார். திரு ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.
5.1.16 . மாநிலச் செயற்குழுக்கூட்டம் கன்னியாகுமரியில மாநிலச் செயற்குழு கூட்டம் கன்னியாகுமரி தோழமைஇல்லத்தில் நடத்தித் தர சகலவித்ததிலும் மாவட்டக்குழு துணைநின்றது. தொண்டர்களாக வருவது. நிதி உதவியை பலரிடம்பெறுவதற்கு மாவட்டத் தலைவர்,செயலாளர், பொருளாளர் உள்ளிட்டுதோழர்கள் மத்தியாஸ், பாபு, ஜெயகுமார்,அருள் மனோகர் ஜெ.வெணிஸ்ஆகியோர் செயல்பட்டனர்.
5.1.17 அம்பேத்கர் திரைப்படம் திரையிடல் பணி; த மு எ க ச மாநிலமெங்கும் இப்படத்தை திரையிட எடுத்த முயற்சியின் ஒருபகுதியாக நாகர்கோவில் ஏ.வி.எம் திரையரங்கில் நமது மாவட்டத்தில்த மு எ க ச வும்,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்துபல்வேறு மத்தியதர தொழிற்சங்கங்களையும், சமூக அமைப்புகளையும் இணைத்து’அம்பேத்கர் திரைப்படத் திரையிடல் குழு’ அமைத்து மாவட்டம் முழுதும்பிரச்சாரமாக்கி 12 காட்சிகள் ஒடச்செய்து சுமார் 5400 பேரைப் பார்க்கவைத்ததுசிறப்பான செயல் .இதில் எல் ஐ சி ஊழியர் சங்கத்தின் ஒத்துழைப்பு குறிப்பிடத் தகுந்த ஒன்று ஆகும்.மாணவர்கள 600 பேரை பார்க்க வைக்க முடிந்தது. மாநில செயற்குழுக் கூட்டம் குமரியில்; மாநிலச் செயற்குழு கூட்டம் கன்னியாகுமரி தோழமைஇல்லத்தில் நடத்தித் தர சகலவித்ததிலும் மாவட்டக்குழு துணைநின்றது. தொண்டர்களாக வருவது. நிதி உதவியை பலரிடம்பெறுவதற்கு மாவட்டத் தலைவர்,செயலாளர், பொருளாளர் உள்ளிட்டுதோழர்கள் மத்தியாஸ், பாபு, ஜெயகுமார்,அருள் மனோகர் ஜெ.வெணிஸ்ஆகியோர் செயல்பட்டனர்
5.1.18 உள்ளூர் தொலைக்காட்சியில்; சி என் ஆர், பாய்ஸ் உள்ளூர் தொலைக்காட்சிகளில் நமது குறும்படங்களை த மு எ க ச வின் அறிமுகத்தோடு திரையிடச்செய்து வருகின்றன சி என் ஆர் டி வி யில் .சந்திரன்,இருதயராஜ்,பேரா.கணேசன் மனோரஞ்சன்தாஸ்,சசிகுமார்ஆகியோர் பங்கு கொண்டு விழிப்புணர்வுக் கருத்துகளை விவாத அரங்கில்,கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தீபாவளி ,பொங்கல் விழாக்காலங்களில் வழங்கினார்கள். கோவையில் செம்மொழி மாநாடு நடந்த முதல்நாளில்பேரா.கணேசன் செம்மொழித் தமிழுக்கு செய்ய வேண்டியது என்ன? தலைப்பிலஅரை மணிநேரம் உரையாற்றினார்’.ஏட்டிக்குப்போட்டி’ நிகழ்ச்சியை கு.சந்திரன்,இருதயராஜ் இருவரும் இணைந்து சி.என்.ஆர் டி வி யில் வழங்கி வருகிறார்கள்.
5.1.19 மாவட்ட கலை, குறும்பட குழுக்கள்மாவட்ட அளவில் குறும்பட இயக்கத்திற்கும், நாடக உருவாக்கத்திற்கும் குழுக்கள் போடப்பட்டது. குறும்பட இயக்கத்திற்கு ஜான் இளங்கோ அமைப்பாளராகவும,அருள்மனோ,கலாசுரன், ரோஸ்ராபின் ஆகியோரை உறுப்பினர்களாகவும், நாடக உருவாக்கத்திற்கு விடியல் குமரேசன் அமைப்பாளராகவும்,ஜெ.ஜெயகுமார், சந்திரன்,இருதயராஜ், மத்தியாஸ் ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்படுகிறார்கள் கலைக்குழு மூன்று தினங்களாக நாடக தயாரிப்பு முகாம் நடத்தி நான்கு நாடகங்கள் தயாரித்துள்ளது.எலியும் பொறியும், மயிலெண்ணை, கார்ட்டூன்கள்,.ஆட்டுக்குட்டி,ஆகிய நாடகங்களேஅவைகள்.
VI. கிளைகளின் செயல்பாடு
6.1 நாகர்கோவில் கிளை; ஜனவரி 29-30 இரு தேதிகளில் த மு எ க ச வும் நாகர்கோவில் தூரிகை குழுமமும் இணைந்து ‘தூரிகை2010 ஓவியக்கண்காட்சி நடத்தியது. அதில் 30 ஓவியர்கள் 125 ஓவியங்களை காட்சிக்கு வைத்தனர்.எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மறுமகள் திருமதி மைதிலி சுந்தரம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்க,கின்னஸ் ஓவியர் மார்த்தாண்டம் ராஜசேகர் கண்காட்சியை திறந்து வைத்தார்.விழாவிற்கு ஓவியர் விக்ரமன் தலைமை தாங்கினார்.
ஜனவரி 30ல் மகாத்மா காந்தி படுகொலை தினத்தில் மக்கள் ஒற்றுமை தினமாக அனுஷ்டித்து மக்கள் ஒற்றுமை கையெழுத்து இயக்கம் கிருஷ்ணன்
கோவிலில் நடைபெற்றது.எழுத்தாளர் பொன்னீலன் துவக்கி வைத்தார்.
ஏராளமானோர் கையெழுத்திட்டனர்.
ஜூலை 16, 2009,2010 ஆண்டுகளில் கும்பகோண குழந்தைகள் கல்வி
வியாபாரக் கொடுந்தீயினுக்கு இரையான நினைவு தினமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனுஷ்டிக்கப்பட்டது. பொதுமக்களும்,காவல்துறை அதிகாரிகள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். நாகர்கோவில் கிளை “ சாணைக்கல் ‘ இலக்கிய வட்டம் மேலாண்மை பொன்னுச்சாமியின் “மின்சாரப்பூ”சிறுகதைத்தொகுப்பினை பேரா.க.கணேசனும், “கரும்பலகையில் எழுதாதவை” கவிதைத்தொகுப்பு நூலை சீனிவாசனும் விமர்சனம் செய்தனர்.உறுப்பினர்கள் விவாதம் செய்தனர். மே 15, 2010ல்’ செம்மொழி தமிழுக்கு செய்யவேண்டியது என்ன?’ அறிமுகக் கருத்தரங்கம் நாகர்கோவிலில் நடைபெற்றது.கவிஞர் அ.லட்சுமிகாந்தன் கருத்துரை வழங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள்
பலர் கலந்து கொண்டனர்.24ஜூலை 2011 அன்று கிளைக்கூட்டத்தில்
ஆர் ஏ கிங்கஸ்லி’ நாவல் சிறுகதைகளில் உழப்பாளர்களும் தொழில்களும்’
தலைப்பில் கட்டுரையும்,திரு வேலவன் வசந்திதேவியின் கல்விகுறித்த நூல்
பற்றி கருத்துரை வழங்கினார்.
6.2 . மெதுகும்மல் கிளை
மெதுகும்மல் கிளை மர்தாந்திரக்கூட்டம் நடத்தி கவிதைகள், கருத்துரை,
கலந்துரையாடல் ஆகியன நடத்துகிறது.இக்கிளையில் படைப்பாளர்கள்,கலைஞர்கள் இருப்பதால் ,நூல் விமர்சனம்,நடிப்பு மற்றும்
பொது விபரங்களை விவாதிக்கும் கிளையாக உள்ளது. கவிஞர் இந்துமா,கவிஞர் குமரித்தோழன் ஆகியோர் கதை,கவிதை,கட்டுரை எழுதி வருவதாலும்,மேடை நாடகக் கலைஞர்கள் அதிகம் இருப்பதாலும் கிளைக்கு
பெருமை சேர்கிறது.
6.3 .மணலிக்கரை கிளை:
இக்கிளை மாதாந்திர இதழாகிய “எதிர்நீச்சல்” வெளிக்கொண்டு
வருவதோடு திரைப்படங்கள், குறும்படங்கள் திரையிட்டு விவாதம்
நடத்துகிறது. இக்கிளை 2009 முதல் 2011ஜூலை முடிய கீழக்கண்ட
பணிகளை நிறைவேற்றி,பிற கிளைகளுக்கு எடுத்துக் காட்டாக அமைகிறது.
1.எதிர் நீச்சல் பத்திரிக்கை மாவட்ட இதழாக விரிவாக்கம் செய்துள்ளது..
2.இளைஞர்களை பற்றிய ஆவணப்படம் ஒன்று ஒளிப்பதிவு செய்துள்ளது.
3.இயக்க உறுப்பினர் கலாசுரன் திரைப்பட இயக்க பயிற்சிக்கு சென்றுவந்தார்.
4.எதிர் நீச்சல் பதிப்பகத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவேற்றியுள்ளது.
5.உருவங்கள் ஊடக ஆய்வு மையம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது.
6.ஏறக்குறைய 250(குறும்படம் மற்றும் ஆவணப்படம்) திரைப்பட குறுந்தகடுகள் சேமித்து வைத்திருக்கிறது.
7.உருவங்கள் ஊடக ஆய்வு மையத்திலிருந்து புரஜெக்டர், திரை ,காமிரா
ஆகியவை வாங்கி வைத்து பிற கிளைகளுக்கு வாடகைக்கு விட்டு பயன்படுத்த துணைபுரிகிறது.
8.நூலகம் ஒன்று வைத்திருக்கிறது.
9.புத்தக விமர்சனக் கூட்டம்
18- 01-2010 ல் ‘வாசித்தலும் விமர்சித்தலும் கலையே’ என்ற சிந்தனைக்கூட்டம் ‘ இனியவை 20’ நூலை தை.லாசரும்,’ காரல் மார்க்ஸ்’
நூலை அருட் தந்தை செபாவும்,’ ஆம் நம்மால் முடியும்’ நூலை திரு இளங்கோவும் விமர்சனம் செய்தனர்.
01.03.2010ல் ‘சிந்தனையை கூர்மையாக்கும் வாசித்தல் கலை’ தலைப்பில்
‘அம்பேத்கர் பேசுகிறார்’நூலை தை.லாசரும்,’மறக்க முடியாத மங்கைகள்’நூலை கு.சந்திரன், ‘மதம் மக்கள் புரட்சி’நூலை கிறிஸ்டோபர்,’1947’ நூலை ஜோசப்ராஜ் ஆகியோர் விமர்சனம் செய்தனர்.
7-02-2011 பொன்னீலனின் ‘மறுபக்கம்’ நூல் விமர்சிக்கப் பட்டது.
6.4 குலசேகரம் கிளை
இக்கிளை மாற்றுத் திரையியக்கம் என்ற அமைப்பை உருவாக்கி குறும்படங்கள், திரைப்படங்களை திரையிட்டு விமர்சனம் செய்து வந்தது.
அங்காடித் தெரு உட்பட இன்னும் பல படங்களை திரையிட்டு விமர்சனம்
இக்காலக்கட்டத்தில் செய்து வந்திருக்கிறது.
6.5 நேசமணி நகர (களரி கலைக்குழு) கிளை;
2009 ஆண்டு வரை செம்மலர் மாத இதழை மாதந்தோறும் கிளைக்கூட்டத்தில் விமர்சனம் செய்து வந்தது. மாதந்தோறும் 20 செம்மலர்
வாங்கிக்கொண்டிருக்கும் கிளை இது.பௌர்ணமி கலைவிழா என்ற வடிவத்தை உருவாக்கியது இக்கிளை.தொடர்ந்து இவ்வடிவத்தை மாவட்ட
மையத்தோடு இணைந்து பல ஊர்களில் மக்கள் வாழும் பகுதியில் சமூக விழிப்புணர்வு கருத்துகளை சிரிக்க சிந்திக்க பாடல்,நாடகம்,நடனம்,பறையாட்டம் ஆகியன கொடுக்க பயன்படுத்துகிறது.மொத்தம் 35 முறைகளில் கடந்த மாநில மாநாட்டிற்குப் பிறகு 7 இடங்களில் நடத்தி சிறப்பித்தது. வருடந்தோறும் ஜூலை 16 கும்ப
கோண குழந்தைகள் நினைவு தினத்தை அனுஷடித்து தட்டிபோர்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்து கல்வியின் சீர்கேட்டையும் நினைவு படுத்துகிறது. அகிலத் திரட்டு பெருவிழாவில் மக்களை கவரும் விதத்தில் சமூக விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி வழங்கி அய்யாவின் சமூக போராட்ட எழுச்சியை நினைவு படுத்தி வரலாற்றை பதிவு செய்து வருவது இதன் சிறப்பு. நாகபட்டிணம் ,திருப்பரங்குன்றம் கலைஇரவுகளில் பங்கேற்று நிகழ்ச்சிகளை வழங்கியது.மார்த்தாண்டத்தில் நடைபெற்ற மாற்றுத் திரைப்பட துவக்கவிழாவில் 20பேர் கலந்துகொண்டனர்.
6.6 மார்த்தாண்டம் கிளை
ஜனவரி 30,2009ல் காந்தி மைதானத்தில் மதவெறி எதிர்ப்புக் கையெழுத்து
இயக்கம் முன்னாள் எம்.எல்.ஏ டி.மணி துவக்கி வைத்து மகாத்மா காந்தி நினைவு தினத்தை மிகச் சிறப்பாக நடத்தியது. அன்று இரவு தீபாஞ்சலி நடத்தி மாநிலக்குழு உறுப்பினர் சோழ நாகராஜன் கருத்துரை வழங்கினார்
.நவம்பர் 1 அன்று தமழகத்தோடு குமரி இணைப்பு நாளை தொடர்ந்து கொண்டாடும் விதத்தில் 2009 நவம்பர் 1 அன்று மாநிலக்குழு உறுப்பினர் முகில் சிறந்த இசையுரை நிகழ்த்தி நமது கலாச்சாரத்தின் வரலாற்றை விவரித்தார். ஜூலை 16,2010 ல் கும்பகோண குழந்தைகள் நினைவு தினம் அனுஷடித்தது.
2010 பிபரவரி 6 ல் காந்தி மைதானத்தில் பிரம்மாண்டமான முறையில்
கலை இரவு நடத்தி,நடிகர்கள் இந்திரன்ஸ்,பாலாசிங், பாரதி கிருஷ்ணகுமார்,
சாத்தூர் லட்சுமணபெருமாள்,மாநில அளவிலான கலைக்குழுக்களையும் மாவட்ட அளவு கலைக்குழுக்களையும்,பாடகர்களையும் பங்கேற்கச் செய்து
மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பைஉருவாக்கியது. கின்னஸ் ஓவியர் மார்த்தாண்டம் ராஜசேகரன்,கலைமுதுமணி இரணியல் கலைத்தோழன்,குழித்துறை ஜெபமணி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.மீசைவீடு சிறுகதை தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டது.
14-3-2010, 11-4- 2010 தேதிகளில் கலை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி
நடத்தியது.
16-7-2010 மாலை நூல் விமர்சனம் மீசைவீடு நூலை விமர்சக்கூட்டம்
நடத்தியது.
1-8-2010, 31-10-2010 தேதிகளில் பேச்சாளர் பயிற்சி நடத்தப்பட்டது.
வங்கி ஊழியர் சம்மேளன மாவட்டச செயலாளர் ஷாகுல் ஹமீது பயிற்சி
கொடுத்தார். உறுப்பினர் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாரபில் குழந்தைகளுக்கான துளிர் இல்லம் 28-11- 2010வ் துவங்கி இரண்டு மாதங்கள் நடத்த துணைநின்றது.
மாணவர் அறிவியல் கலை விழா மிகச் சிறப்பாக நடத்தி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி உட்பட பல போட்டிகளை மிகச் சிறப்பாக
நடத்தியது.
மாற்றுத் திரைப்பட கழகம் துவக்கவிழா பொதுச் செயலாளர் ச.தமிழச்செல்வன் கருத்துரையுடன் நடந்தது.
முன்னாள் எம் எல் ஏ டி மணி குறித்து ஆவணப்படத்தினை தயாரிக்க பலரிடம் பேட்டிகண்டு பதிவு செய்துள்ளது.
ஜூன் 19 அன்று மார்த்தாண்டத்தில் பொன்னீலன் அவர்களின் ‘மறுபக்கம்’ நாவலை கு.சந்திர்ன்,மத்தியாஸ் ஆகியோரும்,குமரித்தோழனின்’ தணியாத தாகங்கள்’ அருள்மனோவும், மணவை அமீனின்’ விடைதேடிப்புறப்படுவோம்’நூலை பேரா.கணேசன் விமர்சனம் செய்தனர்.
6.7 மேல்புறம் கிளை
ஜூலை 16,2009,2010 ஆண்டுகளில் கும்பகோணக் குழந்தைகள் நினைவுதினத்தை அனுஷ்டித்தது.அன்றைய மாலையில் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற கூட்டங்களுக்கு 10 பேர் கலந்து கொண்டனர். பிப்ரவரி 6 மாரத்தாண்டம் கலைஇரவு நிகழ்ச்சிக்கு 10 பேர் தொண்டர்களாக செயல்பட்டனர்.
கருங்கல்லில் நடைபெற்ற கலைச் சங்கமத்தில் நாடகத்தில் பங்கேற்று, ஓவியப் போட்டியிலும் இக்கிளை கலந்துகொண்டனர். மார்த்தாண்டத்தில்
நடைபெற்ற மாற்றுத்திரை இயக்க துவக்கவிழாவிற்கு 5 பேர் கலந்துகொண்டனர்
.மாவட்டக் குழுவின் வேண்டுகோளின்படி 15-1-2011அன்று பொங்கல் விழாவை இக்கிளை கொண்டாடியது.மாவட்ட நிரவாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.அன்று மாலை குறும்படங்கள் திரையிட்டு விமர்சனம் செய்தனர்.
6.8 தக்கலை கிளை
ஜனவரி 30,2010 மதவெறி எதிர்ப்புதின கையெழுத்து இயக்கம் நடத்தியது.2009 ஏப்ரல் 14 அம்பேதகர் பிறந்த நாளில் புலியூர் குறிச்சியில் பௌர்ணமி கலைவிழாவை பத்மநாப புரத்தில் நடததிக் கொடுத்தது.
தக்கலையில் அதன் கிளைசார்பில் ஆகஸ்ட் 8 அன்று 41 கவிஞர்கள்
பங்கேற்ற ”கவிதைச்சங்கமம் “சிவஸ்ரீரமேஸ் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து நடத்திய மாணவர் கலை அறிவியல் விழா தக்கலை அரசி மேல்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாக நடத்தியது ஏராளமான மாணவர்கள் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர்..15ஏப்ரல் 2010 ல் பதமநாபபுரத்தில் அம்பேத்கர் பிறந்த தின விழா நடத்தியது.
6.9 நித்திரவிளை கிளை
இக்கிளை மக்கள் நிறைந்த பகுதியில் 2009பிப்ரவரி 9ல் பௌர்ணமி கலை விழா நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.
24-1-2010 அன்று நித்திரவிளையில் படைப்புகள் விமர்சனத் திருவிழா
நடத்தப்பட்டது.அதில் ஜே.எம்.ஹசன் தலைமை தாங்கினார்.மலர்வதியின் ‘காத்திருந்த கருப்பாயி’ நாவலை முனைவர் க.கணேசன் விமர்சனம் செய்தார்.கவிஞர் குமரித்தோழனின் ‘புனித தாமஸ் மூர்’ வரலாற்று நாவலை திரு மத்தியாஸ் விமர்சனம் செய்தார்.
மலர்வதி , குமரித்தோழன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.மாவட்டப் பொருளாளர் கு.சந்திரன் ,ஜெ.ஜெயகுமார் ஆகியோர் கருத்து வழங்கினர். திரு முஞ்சிறை அ.ரெகுபதி நன்றியுரை வழங்கினார்
6.10 கருங்கல் கிளை
இக்கிளை மாதந்தோறும் கிளைக்கூட்டம் நடத்துகிறது.படைப்புகளும் விமர்சனங்களும் நடத்திடும் கிளையுமாகும். , ஹோலி ஏஞ்சல் ஓவியப்பயிற்சிப் பள்ளியும் இக்கிளையும் இணைந்து தூரிகை 2011 மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தியது.ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். சந்தைத் திடலில் பௌரணமிக் கலைவிழா மிக நேர்த்தியாக நடத்தியது.மிடாலக்காடு கிளையும் தன்னை இணைத்துக்கொண்டு மக்களை கவரும்படி கலைவிழா அமைந்திருந்தது
மிடாலக்காடு கிளையும் .த மு எ க ச கருங்கல் ‘தேடல்’அமைப்பும்,ஒருநாள் கலைஇலக்கிய சங்கமம் நடத்தி பல கிளை உறுப்பினர்களையும் பங்கேற்க வைத்தது.
6.11 இலக்குமிபரம் மாணவர் கிளை;
இலக்குமிபுரம் கல்லூரியில் இலக்கியப் பயிற்சி முகாம்; இது கல்லூரி மாணவர்களைக் கொண்ட கிளையாகும். இக்கல்லூரியில் மூன்று ஆண்டுகளாக தமிழ்த்துறை பேராசிரியர்கள் த மு எ க ச வோடு இணைந்து இலக்கியப் பயிற்சி முகாம் ஒவ்வொரு ஆண்டும் 4 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது.இதில் கவிஞர் முத்து நிலவன், பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் கவிஞர் ஜீவி ஆகியோரும்,மக்கள் கலை இலக்கியம் என்னும் தலைப்பில் பேரா.கணேசன்,இலக்கியத்தில் மறுவாசிப்பு தலைப்பில் பொருளாளர் சந்திரன் நாடகம் குறித்து கவிஞர் குமரித்தோழன், கருத்துரை வழங்கினார். பாடல்களுக்கு கவிஞர் ஜெ.வெணிஸ், உறுமான்ஸ், தவில் கலைஞர்.கண்ணன்,தபேலா கலைஞர் திரு.சுபின்.ஆகியோரும் கருத்தரங்கத்தை மாணவர்கள் இலக்கிய உற்சாகம் பெறும் வகையில் நடத்தி வருகிறார்கள். இது கல்லூரி மாணவர் கிளையாகவும் முனைவர் ஸ்ரீகண்டன், பேரா.மணிகண்டன் ஆகியோர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
6.12 மிடாலக்காடு கிளை
மிடாலக்காடு கிளையின் சார்பில் ‘தாகம்’ வெளியீட்டகம் மூன்று நூல்கள்
வெளியிட்டிருக்கிறார்கள். 16 ஜூலை 2011 கும்பகோணக் குழந்தைகள் நினைவு
தினத்தை தட்டிபோர்டு வைத்து அனுஷ்டித்தது.கருங்கல் கிளையுடன் இணைந்து
பள்ளி மாணவர்களுக்கு ஒவியப்போட்டியும் பௌர்ணமி கலை விழாவும்,கலைச்சங்கமமும் நடத்தியது.இக்கிளையில் மேடைநாடக கலைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
6.13. போக்குவரத்துக் கிளை
ஜூலை 16ல் கும்பகோண குழந்தைகள் நினைவுதினத்தில் தட்டிபோர்டு வைத்து அனுஷ்டித்தது.அம்பேத்கர் திரைப்படம் திரையிட்டபோது அதற்கு துணைநின்றது.
மேற்குறிப்பிட்ட கிளைகளில் பல கிளைகள் உட்பட அனைத்துக் கிளைகளுமே இன்னும் வேகமான செயல்பாட்டுக்கு அடியெடுத்துவைக்க
வேண்டியுள்ளது.மாவட்டக்குழு உறுப்பினர்களுக்கும் கிளைக்கும் நெருங்கிய தொடர்பு மிக மிக அவசியமாகிறது.
VII. எதிர்காலப் பணிகள்
7.1.மகா கவிதைச் சங்கமம் ஆண்டுதோறும் பிப் 14ல் நடத்துவது.
7.2.மாவட்டத்தில் கிளைகளின் கலைச்சங்கமம் வருடத்திற்கு இருமுறை நடத்துவது.
7.3.மணலிக்கரை கிளை நடத்துகின்ற’ எதிர்நீச்சல்’ இதழை மாவட்டம் முழுக்க பரவலாக்கி அதன் வடிவத்தை அழகுற கொண்டுவருவது.
7.4.குறும்படங்கள் ஆவணப்படங்களை மக்களிடம் கொண்டுசெல்ல முன்பே
திட்டமிட்டிருந்த திரைப்படக் கழகங்களை மாவட்டத்தில் குறைந்தபட்சம்
பத்து மையங்களில் பதிவு செயவது.
7.5. கருங்கல் மையப்படுத்தி ‘தேடல்’ நாகர்கோவில் மையமாக்கி ‘சாணைக்கல்’ தக்கலை மையப்படுத்தி ‘சந்திப்பு’ மார்த்தாண்டம் ‘களம்’ஆகிய இலக்கியவட்டங்களை இன்னும் உத்வேகத்தோடு முறையாக
மாதத்தில் ஒருநாள் கூடி படைப்பு விமர்சனம்,கருத்தரங்கம் நடத்துவது.
7.6. குறைந்தபட்சம் ஆண்டுக்கு இருமுறை நாடகப்பட்டறை நடத்துவது.
7.7.கிளைகளில் படைப்புகள் வாசிப்பு இயக்கம் நடத்த ‘சிந்தனை ஞாயிறு’
எனும் பேரில் கூட்டம் நடத்துவது.
7.8. சமூகச் சீர்திருத்தவாதிகள்,சுதந்திரப்போராட்ட தியாகிகள், கலை இலக்கியவாதிகள் இம்மாவட்டத்தில் பிறந்தோரையும் அவர்களின் பிறந்த நாட்களில் பொது மக்ககளுக்குத் தெரியும்படி கருத்தரங்கம் அந்தந்த கிளைகளில் நடத்த திட்டமிடுவது.
7.9.பௌர்ணமிக் கலைவிழா வடிவத்தை தொடர்ந்து மக்கள் வாழும் பகுதிகளில் திட்டமிட்டு சரியான ஏற்பாடுகளோடு நடத்தி மக்களிடம் சமூக விழிப்புணர்வை உருவாக்குவது.
7.10 இருமாதங்களுக்கொருமுறை படைப்பாளர்களின் படைப்புகளை விமர்சனம் செய்யம்போது த மு எ க ச வுக்கு வெளியே இருக்கும் படைப்பாளிகளின் படைப்பு ஒன்றை அவசியம் எடுத்து விவாதிப்பது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் குறிக்கோள்கள் 1.உலக மக்களின் பொது எதிரியான ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சமரசமின்றிப் போராடுவது.
2.உலகமெங்கும் எழுகின்ற உழைக்கும மக்களின் இயக்கங்களுக்குத்துணை நிற்றல்.உழைப்பை உன்னதப்படுத்தும் படைப்புகளை படைத்தல் மற்றும் அத்தகைய படைப்புகள் எங்கிருந்தாலும் உயர்த்திப்பிடித்தல்.
3.அனைத்துவகை மதவெறிக்கும் எதிராக -ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் வரணாசிரமவாதி களின் முயற்சிக்கு எதிராக மக்களின் பன்முகப் பண்பாட்டுக் கூறுகளை உயர்த்திப்பிடித்தல், நாட்டின் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் சமத்துவமான வாழ்வுக்காகவும் உறுதியுடன் போராடுவது.
4.அனைத்து நாடுகளின் சதந்திரத்தையும், இறையாண்மையையும் காத்திட உறுதி கொள்ளுதல்
5.சகலவிதமான மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக அறிவியல் பார்வையுடன் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இயக்கம் நடத்திடுதல்
6.தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக வழிபாட்டு மொழியாக-வழக்கு மொழியாக-கற்பிக்கும்
வழியாகத் தமிழே ஆளவேண்டும் என்கிற பாதையில் தமழ் மொழி வளர்ச்சிக்காகவும் மத்தியில் தேசிய மொழிகள் அனைத்துக்கும் சம உரிமைக்காகவும், சம வாய்ப்புக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்புதல்.
7.பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் வைத்துப் போராடும் உரிமை
எனும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் சகல பகுதி மக்களுக்கும் கிடைத்திடத் துணைநிற்றல்.
8.சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக-ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் விடுதலைக்காக-
பழங்குடி மக்களின் விடுதலைக்காக-ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை அடித்தளமாக கொண்ட் இடையறாது சமரசமின்றி போராடுவது.
9.பெண் விடுதலை இல்லாமல் மனித குல விடுதலை மூழுமை பெறாது என்கிற உணர்வுடன் பெண் சமத்துவத்துக்காக இடையறாது சமர் புரிதல்
10.மூன்றாம் பாலினமான அரவாணிகளின் வாழ்வுரிமைக்காக, அவர்களின் கௌரவமிக்க
வாழ்வுக்காகச் சாத்தியமான வடிவங்களிலெல்லாம் தொடர்ந்து செயல்படுதல்.
11.திரைப்படத் துறையிலும்,தொலைக்காட்சி ஊடகத்திலும் முற்போக்கான மாற்றங்கள்
உண்டாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது; குறும்பட-ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களுடன் ஒரு மகத்தான தெரு சினிமா இயக்கத்தைத் தமிழகமெங்கும் கட்டி எழுப்புதல்.
12. ழந்தைகளின் உரிமைகளுக்காகவும், அனைவருக்குமான ஒரு பொதுக்கல்வி முறைக்காகவும் தொடர்ந்து போராடுவது.
இத்தகைய லட்சியங்களையும், நோக்கங்களையும் குறிக்கோள்களையும் ஏற்கிற அனைத்து படைப்பாளிகளையும்.எழுத்தாளர்கள், கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், வாசகர்கள், விமர்சகர்கள்,பண்பாட்டு ஊழியர்கள், அறிவு ஜீவிகள், கலை இலக்கிய ஆர்வாலர்கள் அனைவரையும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இருகரம் விரித்து அழைக்கிறது
,
.