கல்வித் துறையில் ஒரு சமூக இலக்கிய
செந்தாரகை
தோழர் சங்கரராஜூலு
குமரி கலைப்பிரியன்
‘தோழர் , வணக்கம். இன்றைக்கு (ஜூன் 15, 2016) ஆங்கில
இந்து பத்திரிக்கையில நம்ம சங்கரராஜூலு சார் இறந்திட்டதாக செய்தி வந்நிருக்கு ‘ என என்னுடம் பணியாற்றும் நண்ப்ர் சொன்னவுடன் அதிர்ந்து போய் அருகிலிருந்த நூலகத்தில்
சென்று அந்த செய்தியைப் பார்த்தேன். நான் நேரில் பார்த்த உருவத்தைவிட சற்று மாறுபட்ட
புகைப்படம் பிரசுரிக்கப்பட்டு, ஓய்வுபெற்ற மண்டலக கல்லூரி கல்வி துணை இயக்குநர்,அழகப்பா
பல்கலைக் கழக பதிவாளர் என்று போட்டிருந்ததை பார்த்து உறிதிப்படுத்திக்கொண்டு எனது மனது
பதைபதைத்தது ‘அய்யோ நான் நன்றி கெட்டவனாகவல்லவா இருந்துட்டேன். அவரை மதுரை திருநகர்
இல்லத்தில் அவர் 1986ல் பணி ஓய்வு பெற்றபிறகு 2006 வரை அடிக்கடி வீட்டில் சந்தித்து
நலம் விசாரித்து வந்தவன் இதுவரை நேரில் சென்று பார்க்கவில்லையே வெட்கப்பட்டவனாக மனதில்
நொந்து கொண்டு வீட்டில் வந்து மனைவியிடம் சொல்லி என் தந்தையை பத்து வயதில் பறிகொடுத்தபோது
எப்படி நான் அழுதோனோ அப்படி கண்ணீரை நீண்ட நேரம் அடக்க முடியவில்லை. எனது மனைவிக்கும்
அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆம் எனது காதல் வாழ்க்கை திருமணத்தில் தாலியை எடுத்துக்
கொடுத்தவர் அவர்தான்.
தகவலே
அடக்கம் செய்வதற்கு 3 மணிக்கு முன்புதான் செய்தி
கிடைத்தது. சென்னையில் என் மகள் வீட்டில் இருந்ததால் மதுரைக்கு அடக்கத்திற்குள் போக
முடியாது. அடுத்தநாள் திருநகர் செல்வது என முடிவெடுத்து அன்று இரவெல்லாம் அவரைப் பற்றியே
சிந்தனை எனது உறக்கத்திற்கு தடைபோட்டுவிட்டது.
திண்டுக்கல்
மாவட்டத்தில் சிறிய கிராமத்தில் வேடசந்தூரில்
வேதநாயகம் வாத்தியாரின் அரவணைப்பில் பதினோராம்
வகுப்பு முடித்தவுடன் எனது சித்தப்பாக்கள் காளியப்பன், முனியப்பன் ,தாய்மாமா வையாபுரி
மச்சான் சக்திவேல் ஆகியோரின் உதவியால் மேலூரில் பி யூ சியும் பி.காம் பட்டப்படிப்பும் படிக்க முடிஞ்சது.
அப்படி மேலூரில் படிக்கும்போது பி சி மாணவர் விடுதியில் இருந்து படிக்கும்போது தும்பைப்பட்டி
தியாகி கக்கன் அவர்களின் மருமகன் மாதவன் ,என்னுடன்
பி.காம் படித்துக்கொண்டிருந்த நண்பர்கள் மாரிமுத்து ,கிருஷ்ணன்,பி ஏ படித்து சத்துணவுப்
பணியாளர் சங்கத்தில் மாநில பொறுப்பாளராக இருந்து இப்போது ஓய்வு பெற்றிருக்கின்ற வைத்தியநாதன்
ஆகியோரின் உதவியும் தும்பைப்பட்டி, எரிச்சி
மலம்பட்டி,கீழவளவு ஊர் மக்களும் எனக்கு அணுசரணையாக இருந்தார்கள்..சித்தப்பா காளியப்பன்
கூட்டறவு சங்கத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்த இடதுசாரி அரசியல் சிந்தனை கொண்டவர்
கொட்டாம்பட்டியில் பணிபுரிந்ததால் விடுமுறை காலமெல்லாம் அவர் வீட்டிலேயே தங்கி விடுவேன் சிந்தனைபூர்வமான அறிவரைகளும் முழு கண்காணிப்பும்
அவருடையதே.சித்தப்பா எரியோடு முனியப்பன் நான் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வரும்போது
முற்போக்கு அரசியலை ஊட்டுவார், நல்ல நாவல்கள் கொடுத்து படிக்கச் சொல்வார் .எனக்கு அந்த
வயதில் விவரங்கள் பிடிபடாது. படிக்கிற நூலிலிருந்து மைய்யக்கருத்தை எடுக்கத் தெரியாது.
பி.காம் பட்டத்தை முடித்துவிட்டு சித்தப்பா மாமா ஆகியோரின் உதவியால நாகர்கோவில் எஸ் டி இந்துக்கல்லூரியில்
எம். காம் பட்டம் முடித்துவிட்டேன்., சித்தப்பா தொழிற்சங்கதோடு தொடர்பு இருந்ததால்
அப்போது திண்டுக்கல் சி ஐ டி யூ மாவட்டச் செயலாளராக இருந்த ஆர் எஸ் ராஜேந்திரன் ஒரு
டுடோரியல் கல்லூரி நடத்திவந்தார் .அதில் நானும் தோழர் என் வி மகன் கல்யாண சுந்தரமும்
பத்து,பதினொன்னு வகுப்பு பாடங்களுக்கு வகுப்பு எடுப்போம்.தோழர் ஆர் எஸ் .ராஜேந்திரன் கணக்குப் பாடம் எடுப்பார்
.
இப்படி ஒரு வருஷம் கடந்தது சென்னை வேலைவாய்ப்பு
அலுவலகத்திலிருந்து கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு இன்டர்வியூ அழைப்பு வந்துகொண்டே இருந்தன.. மேலூரில் பட்டப்படிப்பு
முடித்து வெளியே வந்த போது, முன்பு கரூர் அரசுக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரயராக
பணிபுரிந்து அந்த காலேஜூக்கு முதல்வராக டாக்டர
சங்கரராஜூலு முதல்வராக பொறுப்பேற்றார்.. தும்பைப்பட்டி மாதவன் காலேஜ் மாணவர் பேரவைத்
தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டி போட்டுத் தோல்வி அடைந்துவிட்டார்.
சாதிச் சண்டை
அடிக்கடி மாணவர்கள் மத்தியில் வந்து அடிதடி நடக்கும் கல்லூரியாக அது பேரு வாங்குச்சு.முதல்வராக
இருந்த அய்யா சங்கரராஜூலு இந்த நிலைமையை கட்டுக்குள்ள கொண்டுவருவதற்கு தேர்தலில் ஜெயித்த
மாணவப் பேரவை பொறுப்பாளர்களையும தோல்வி அடைந்த மாதவன் உட்பட மாணவர்களையும் சேத்து வச்சு
எந்த கல்லூரி பிரச்னைகள் பற்றியும் விவாதம் செய்து மாண்வர் ஒற்றுமையினாலே சுமூகமான நிலைமக்கு
கொண்டுவருவார். மாணவர்கள் மத்தியில் தலைமைப் பண்பை பக்குவமாக உருவாக்குவார்.சக ஆசிரியர்கள்
மத்தியிலும் இணக்கமாக நடந்துகொள்வார் என நண்பர் மாதவன் மூலம் கேட்டிருக்கிறேன். \அவர்
காலத்துல் சாதிச் சண்டையைக் கல்லூரியிலிருந்து
வெரட்டிவிட்டார்.
தலித்
சமூகத்தைச் சேர்ந்த மாதவன் அவரோடு அன்புக்கு
பாத்திரமாகிவிட்டார்.. நான் ஏராளமாக அரசுப்பணி, வங்கிப்பணி தேர்வுக்கு தோழர் ஆர் எஸ்
ராஜேந்திரனின் உதவியோடு கலந்து வந்தேன். அய்யா சங்கரராஜூலு தோழர் கே பி ஜானகி அம்மாவின்
மருமகன். தோழர் கே பி ஜானகி அம்மாள் சுதந்திரப் போராட்டத் தியாகி, சிறுவயதிலிருந்து
நாடகத்தில் சுதந்திர வேள்வியை வளர்த்தவர், தியாகி விஸ்வநாததாஸூடன் இணைந்து நடித்து
பலமுறை சிறைசென்றவர்.அதன்மூலமே ஆங்கிலேயன் அம்மாவுக்கு ஆஸ்துமா நோயைக் கொடுத்தான்.
பின்பு இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவியானார் 1975 காலகட்டத்தில தலைமறைவு வாழ்க்கையில்
என்னோட சித்தப்பா காளியப்பன் போடிநாயக்கனூரில் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த போது
வீட்டுக்கு வந்து தங்கி போயிருக்கிறார்கள். ,சித்தியின் பிரசவத்துக்கு போயிருந்த என்
அம்மா, தோழர்கள் பாப்பா உமாநாத் கே பி ஜானகி அம்மாள் ஆகியோருக்கு சமச்சு போட்டிருக்கிறார்கள்..
இந்தச் சூழலில் மாதவன் மூலமாக அய்யா சங்கரராஜூலு
அவர்களின் தொடர்பு ஏற்பட்டது.. திருநெல்வேலி மண்டல கல்விக் கல்லூரி இணை இயக்குநராக
அய்யா சங்கரராஜூலு பதவியேற்றிருந்தார். என நண்பர் மாதவன் மூலமாக அறிந்து தோழர் கே பி
ஜானகி அம்மாளிடம் ‘தோழர் உங்க மருமகன் நெல்லை கல்லூரி கல்வி இணை இயக்குநாராக வந்திருக்கிறாங்க
,எனக்கு ராஜபாளையம் ராஜூஸ் கல்லூரியிலிருந்து உதவிப் பேராசிரியர் பணிக்கு இன்டர்வியூ
வந்திருக்கு அய்யாவோட நான் சில ஆலோசனைகள் கேட்கணும் ‘ எனக் கேட்டதும். ‘அவர் ரொம்ப
நல்லவன் நீயே அவருகிட்ட சொல்லிக்க நல்ல வழியைக் காட்டுவார், ஆலோசனையும் சொல்லுவார்,
நீ தைரியமாக இன்டவர்வியூ அட்டண்ட் பண்ணு’ நான் சொல்லவேண்டி வராது’ என தோழர் கே பி ஜானகியம்மா அவர்கள் சொன்னார்கள். பின்பு நான்
சென்று பார்த்து என் நிலைமைகளை எடுத்துச் சொன்னேன்.
கோவில்
பட்டி ஜி வி என் கல்லூரி, உசிலம்பட்டி பி எம் டி கல்லூரி திண்டுக்கல் ஜி டி என் கல்லூரி
ஆகிய கல்லூரிகளுக்கு இண்டரவியூ வந்தன. இவைகளில் கடுமையான போட்டி. எனக்கு வேலை கைநழுவியது.
பின்பு அகஸ்திஸ்வரம் கல்லூரிக்கு இன்டர்வியூ வந்தபோது அங்கு நான் மட்டுமே ஆஜரானேன்.
இன்டர்வியூவில் கலந்து கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னேன். படிப்பு ஆவணங்களை பார்த்துவிட்டு,நிர்வாகம்
பதில் பின்பு அனுப்புவதாக சொன்னார்கள். வீட்டுக்கு வந்து ஒருமாதமாக எனக்கு கல்லூரியிலிருந்து
எவ்வித பதிலும் வராத காரணத்தால் , அய்யா சங்கரராஜூலு அவர்களிடம் சென்று நிலைமையைச்
சொன்னேன்.. கல்லூரிக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்
கடிதம் எழுதிவிட்டு எனக்கு நகல் அனுப்புங்க , என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்’ என சொன்னார்கள்.
நியமனம்
செய்ய காலதாமதமானதால், எனக்கு முன்பு நியமனம்
செய்தவர்களுக்கு சம்பள நிதி நல்கையை நிறுத்திவிட்டார்.வந்த விண்ணப்பதாரருக்கு போட்டி
யாரும் இல்லாததால் ‘எஸ் சி காலிப்பணியிடத்தை நிரப்பாமல் நிதிநல்கை வழங்க முடியாது
‘ அதன்பின்பே எனக்கு நியமன உத்தரவு வந்தது. இருக்கிற அரசு சட்டத்தை சரியாகவே பயன்படுத்தி
நிர்வாகங்களிடம் சரியான விளக்கத்தை எடுத்துச் சொல்லி தயக்கம் காட்டிக்கொண்டிருந்த நிர்வாகங்களிடம்
அரசு சட்டங்களை நிறைவேற்றவேண்டும் என்பதை கறாராக அமுல்படுத்தி என்னைப் போல பத்து கல்லூரிகளில்
உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் தலித் சமூகத்தைச் சார்ந்தோரை நியமனம் செய்ய தன்னுடைய
அதிகாரத்தை சட்டப்படி பயன்படுத்தி வாழ்க்கைக்கு வெளிச்சம் காட்டினார்
.அதன்பின்பும் இப்படி நியமனம் செய்யப்பட்டோருக்கு
ஏதாவது இடையூறுகள் வருகின்றனவா என்பதையும் கண்காணிப்பு செய்தார். கல்லூரி ஆசிரியர்
சங்கமான மூட்டாவின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டு உடனுக்குடன் தீர்த்துவைத்து அந்த இயக்கத்தாரின்
மனதிலும் இடம் பிடித்தார். அவருக்கு கீழே பணிபுரியும் அத்தனை ஊழியர்கள் மத்தியிலும்
சமத்துவமாக சகோதர வாஞ்சையோடு பழகி அவரின் அன்புக்கு கீழே கொண்டு வந்தார்.
அனைத்து ஆசிரியர்கள் மத்தியிலும் நன்மதிப்பை
பெற்றார். அவர் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில்
ஒரு கல்லூரி நிர்வாகம் செய்த அநீதிகள் முறைகேடுகளுக்கு எதிராக மூட்டா இயக்கம்
நடத்தியபோது ,நிர்வாகம் சங்கப் பொறுப்பாள்கள்மீது மான நஷ்ட வழக்கு தொடுத்துவிட்டது.
அந்த வழக்கு பத்து ஆண்டுகளாக நடந்து வந்தது. அய்யா சங்கரராஜூலு பதவியில் இருக்கும்போதும்
மூட்டா கொடுத்த புகார்கள், அதன்மீது அலுவலகம் எடுத்த நடவடிக்கை ஆகியவைகளை மிகச்சரியாக
பராமரித்து பாதுகாத்து வைத்திருந்தார். அவர் ஒய்வு பெற்றபின்பு வழக்கில் சாட்சியாக
வரவேண்டிய தருணத்தில் ,நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வந்து அவருடைய பணியை எவ்வித பாரபட்சமில்லாமல்
சாட்சி சொன்ன அடிப்படையில் நீதிமன்றம் மானநஷ்ட
வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.
என்மீது
மிகப் பரிவோடு அடிக்கடி விசாரிப்பார்.பணிநெறிமுறை பணி செய்யவேண்டும்,பாடம் நடத்தும்
ஆற்றலையும் வளர்த்தெடுக்கவேண்டும் .உங்களால்
முடிந்த அளவு உங்களுடைய சமூகத்திற்கு உதவிகளை செய்யவேண்டும். அந்த சமூகம் எவ்வித மேம்பாடும்
அடையாமல் இருக்கிறது. நீங்களெல்லாம் முன்னேறி கஷ்டப் படுகிறவர்களுக்கு வழிகாட்டவேண்டும்.’
என்று நன்கு அறிவுரை கூறுவார்.
நான் காதலித்த பெண்ணை திருமணம் செய்யும் போது அய்யா
சங்கரராஜூலு நாகர்கோவிலுக்கு வந்து தாலி எடுத்து கொடுத்து அவரின் முன்னிலையில்தான்
நடைபெற்றது.எங்கள் இருவரையும் திருநகர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுஅய்யாவின் துணைவியாரிடமு
அறிமுகம் செய்து விருந்து வைத்து உபசரித்தார். என்னுடைய இரண்டாவது பையனுக்கு பெயர்
வைக்கும்படி அவரிடம் கேட்டேன்.அவர்தான் எழில்முதல்வன் என்ற பெயரைச்சொல்லி ‘. இந்த பெயர்கொண்டவர்
இயற்பெயர் ராமலிங்கம் அவர் நல்ல எழுத்தாளர் .அவரை எனக்கு நிரம்ப பிடிக்கும் தமிழ்துறை
பேராசிரியர்’ என்று விளக்கம் சொன்னார்.
நான் பணிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் முற்போக்கு இயக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டேன்.
மூட்டா இயக்கத்தில் பேரா.பிரட் ஜெயப்பிரகாஷ் அவர்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு அவரும்
எனக்கு ஏராளமான அறிவுரைகளையும் கருத்துகளையும் கொடுத்தார்.
தமிழ்நாடு
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் 1989ல் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று இலக்கியப்
பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது.மூட்டா இயக்கமும் த மு எ க சவும் என்னை செதுக்கியது.இரண்டு
அமைப்புகளுக்கும் எனது பங்களிப்பை என்னால் முடிந்தவரை கொடுத்துள்ளேன்
சில ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு இரண்டு புத்தகங்கள்
கைக்கு கிடைத்தன.ஒன்று ‘எங்கெங்கு காணினும்’என்ற மரபுக் கவிதை நூல், இன்னொன்று தமிழ்
இலக்கிய வரலாறு இவற்றை எழுதியவர் டாக்டர் எழில் முதல்வன்
அய்யா ஓய்வு பெற்ற பிறகு அவரை சந்திக்கும்போதெல்லாம்
இலக்கிய ரீதியாகவும் கருத்து பரிமாற்றம் செயவோம்.திருக்குறள் நூலுக்கு தெளிவுரை எழுதியிருக்கிறார். இளமையில் ஒரு நாடகத்தில் நடித்து பார்வையாளர் அனைவரையும்
கவர்ந்திருக்கிறார். இலக்கிய பேராசான் ஜீவாவின் தூண்டுதலுக்கிணங்க ‘தாமைர’ மாத இதழில்
‘ இளம்பூரணர் ‘ என்ற புனைப்பெயரில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். நண்பர் மாதவனிடத்திலும்,
கரூர் வைஷ்யா வங்கியில் பணியாற்றிய நண்பர் மருதமுத்து,செல்வம் என்பவர் இன்னும் ஏராளமானவர்கள்
இவரின் வழிகாட்டலில், முன்னேறியவர்கள்.இவர்கள் அனைவருமே தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள்.
அய்யா சங்கரராஜூலு ஒடுக்கப்பட்டோரை உயர்த்திவடும்
தர்மத்தைத்தான் கையிலெடுத்திருக்கிறார் என்றும்
புரிந்துகொண்டேன். ஒரு நல்ல ஆசிரியர் மாணவர் உறவுக்கு அய்யா சங்கரராஜூலு மிகச்சிறந்த
உதாரணம். ‘அவரும் பட்டப்படிப்பை படிக்கும்போது ஏழ்மைநிலைமையில்தான் இருந்திருக்கிறார்
.காலை 5 மணி முதல் ஏழு மணிவரை செய்தித்தாள் வீடுகளுக்கு போட்டுவிட்டுத்தான் கல்லூரிக்கு
புறப்படுவாராம் . படிக்கும்போதே தன்போன்ற மாணவர்களோடு கூடுதல் நட்பு வைப்பாராம். அதோடு
தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமங்களில் படக்கூடிய தீண்டானம அவலங்களை பார்த்து வேதனைப் படுவாராம்’
என்று நண்பர் மாதவன் என்னிடம் சொல்வார். அவர் ஒய்வு பெற்ற காலங்களில் இவரின் வழிகாட்டுதலிலும்
உதவியாலும் முன்னேறிய மாணவர்களைப் பற்றி தனது வீட்டில் மகள்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பாராம்..
சில மாணவர்கள் நண்பர்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவார்களாம். அய்யா சங்கரராஜூலு
அவர்களின் துணைவியார் ஓய்வு பெற்ற சில ஆண்டுகள் கழித்து இறந்துவிட்டார்.
தமிழ்நாடு
கலை இலக்கியப் பெருமன்ற மாநிலத் தலைவராக இருந்த சாகித்ய அகாடமி விருதுபெற்ற தோழர் பொன்னீலன்
ஏற்கனவே’ ஜீவா என்றொரு மானிடன்’ என்ற ஜீவாவின் வாழ்க்கை வரலாற்றை நுட்பமாக படைத்தவர்.
ஜீவாவோடு தமிழகமெங்கும் பழகியவர்களிடம் இன்னும் தகவல் சேகரிக்கலாம் என திட்டத்தோடு
தமிழகமெங்கும் 55 பேரைக் கண்டுபிடித்து பேட்டி கண்டு அவற்றைத் தொகுத்து ‘ஜீவாவின் பன்முகம்’
என்ற 355 பக்க மிக அருமையான நூலாக 2007ல்வெளி
வந்துள்ளது. குமரி மாவட்டத்தில் பேட்டி காண்பதற்கு நானும் அதில் உதவியிருக்கிறேன்.
அந்த நூலில் நூல் வெளி வந்தபிறகு ‘அடிப்படையில் அவர்(ஜீவா) இலக்கியவாதிதான்’ என்ற கட்டுரையை
பார்த்து இன்னும் மனதை அவரின் நெருக்கத்திற்கு கொண்டு சென்றேன். அவர் ஜீவாவோடு நெருங்கிப்
பழகியிருக்கிறார். ஜீவாவின் படைப்புகள் பற்றி வித்தியாசமான ஆய்வை அவர் ஜீவாவோடு பழகிய
தன்மையோடு இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அக்கட்டுரையில் அவரே சொல்கிறார்
‘நான் ஜீவாவோடு நெருங்கி பழகியிருக்கிறேன்
எங்க மாமா குருசாமி வீட்டுக்கு வருவாரு.குருசாமின்னா ஜானகி அம்மா கணவரு. மதுரை வந்தா
அங்கதான் சாப்பிடுவாரு அம்மா உங்க வீட்டுக்குத்தான் சாப்பிட வருவேன் என சொல்லிருவாரு.
அவங்க பத்து முட்டை வாங்கி வைப்பாங்க இவரு பத்து முட்டையையும் சாப்பாட்டுல புரட்டிச்
சாப்பிடுவாரு.நல்லாச் சாப்பிடுவாரு. கிடைக்காத நேரத்துல கஞ்சி சாப்பிட்டுகிட்டு சந்தோசமா
இருப்பாரு, பட்டினியும் கிடப்பாரு. மனிதாபிமானப் பண்பு உள்ளவர்.ஒவ்வொருத்தரையும் பேர்
சொல்லி விசாரிப்பாரு’ என்றும் அவர் பேட்டியில் இன்னொரு இடத்தில்
‘அவருக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. மதுரை மணவாளன் ஜீவா பாடல்களை எல்லாம் தொகுத்து வைச்சிருப்பார்.
இன்னொருத்தர் சுந்தரராஜன் , ஒரு மில் தொழிலாளி, ஜீவா பாட்டுல 100 பாட்டு மனப்பாடம்
பண்ணி வச்சி எனக்குச் சொல்லிக் கொடுப்பாரு. அவர் மூலமாத்தான் நான் ஜீவா பாடல்களை தெரிஞ்சுகிட்டேன்.
அவர் தம்பி நடராஜன், அவரும் எங்க குடும்பத்துல ஒருத்தராப் பழகுவாரு. இதுமாதிரி குடும்பங்களை
இணைக்கிறதுதான் ஜீவாவோட பலம்.’
என்று
பேட்டியை முடிக்கும்போது என்னுடைய சிந்தனை அய்யா சங்கரராஜூலு ஏன் அவர் வாழ்ந்த காலத்தில் தன்னையும் தன் குடும்பத்தையும்
எளிமையான முறையில் பாதுகாத்துக்கொண்டு ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள்மீது அவ்வளவு முக்கியத்துவம்
காட்டினார்? என்ற கேளவியோடு சிறகடித்துப் பறந்தது.
கட்டுரையை வாசித்து முடித்துவிட்டு அய்யா என்ற அடைமொழி அதைவிட மகத்துவம் நிறைந்த தோழர்
என்ற வார்த்தை எனது மனதை கவ்விக்கொண்டது.
2013 ஆம் வருடம் நான் எப்போதோ வாங்கி வீட்டில்
வைத்திருந்த ஒரு புத்தகம் சங்கை வேலவன் எழுதி
பாவை பப்ளிகேசன் 2004ல் வெளியிட்ட ‘மனித நேயக் கலை இலக்கியம்’ எடுத்து படித்தேன்.முதல்
கட்டுரை ‘செம்மைத் தாலாட்டு எனது மனத்தை இழுத்த
நுழைவாயில். அதில் கிராமத்து மக்களின் செவிவழியே பரவி எனது அம்மா நாத்து நட வயலில்
இறங்குவதற்கு முன்பு கரையில் நிற்கும் மரத்தில் தொட்டிலைக் கட்டி தூங்க வைக்க பாடிய
தாலாட்டு,மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டையின் ‘ சின்னஞ்சிறு கண்மலர்’ தாலாட்டு,ஜீவாவின்
‘பாலின்றி பிள்ளையழும்’ என்ற பாடல் வரிகள் ஆகியவைகளைத் தொட்டு,1960 ல் உழைக்கும் மக்களின்நிதி
உதவியோடு ஆர் கே கண்ணனின் கதை வசனத்தில் வெளிவந்த ‘பாதை தெரியுது பார் ‘ என்ற திரைப்பட கதையில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்,பட்டினியோடு
தொழிலாளர்கள் போராட்டத்தில் உறுதியோடு நின்றனர். வீட்டில் அடுப்பு எரியவில்லை. தாய்க்குப்
பால் சுரக்கவில்லை.கண்ணீர் மட்டுமே கொட்டுகிறது. அந்த தாய் பாடுவதுபோல எழுத்துலக
ஜாம்பவான் ஜெயகாந்தனின் ‘ அழுத கண்ணீரும் பாலாகுமா அதனால் உனது பசி தீருமா இன்பச் சுமையால் இருந்தவனே
துன்பச் சுமையாய் பிறந்தவனே ‘ என்ற பாடல் வரிகள் அந்த புத்தகத்திற்குள் சிந்தனையை புதைக்கவைத்தது.பாவலர்
வரதராஜன் சகோதரர்களின் அர்ப்பணிப்பை கலைநயத்தை, ஆயிரக்கணக்கான மக்களை தங்களது கதாகாலட்சேபம்
,பாடல்களால் சுண்டியிழுத்தவிதம், வெ.ந திருமூர்த்தியின் சிந்தனைப் பாடல்களின் வீரியம்
ஆகியவைகள் விரிவாக விளக்கிவிட்டு , பொதுவுடமைக் கருத்துகளை மக்கள் மனதில் விதைத்த தியாகி
மணவாளன் குழுவினரை அறிமுகப் படுத்திவிட்டு,
இப்படியும் ஓர் இசையமைப்பாளர்’ என்ற கட்டுரையில் பொதுவுடமை இயக்கத்திற்காகவே அர்ப்பணித்த
இசைமேதை எம் பி சீனிவானின் மகத்துவத்தை விளக்குகிறார்.
கல்லூரி ஆசிரியர் சங்கமான மூட்டா அமைப்பு
வருடந்தோறும் மூன்றுநாட்கள் கல்லூரி ஆசிரியர்களைத் திரட்டி தனியான இடத்தில் முகாம்
நடத்தி அவர்களை செதுக்குகிற வேலையைச் செய்யும்போது 1985 என நினைக்கிறேன். அந்த ஆண்டு
கீரிப்பாறையில் முகாம் நடத்தும்போது நானும் மதுரை உசிலம்பட்டி பி எம் டி கல்லூரியில்
பணியாற்றிய தோழர் எஸ் ..விவேகானந்தன்,மற்றும் தோழர்களுடன் ஒரு பாடலைப் படித்தோம் .அப்போது
எம் பி சீனிவாசன் இசையமைத்தார் என்பது மட்டுமே தெரியும். ஆனால் இதை யார் எழுதியது யார் பாடியது என்பது தெரியாது
சங்கை
வேலவன் ‘வரலாற்று
புகழ்மிகு
பாடலின்
வரலாறு’
என்ற கட்டுரையில், இப்படி தொடங்குகிறார். ‘விடுதலைப் போரில் வீழ்ந்த
மலரே
தோழா
! தோழா
!வீரர்
உமக்கே
வணக்கம்
வணக்கம்
தோழா!
தோழா!
“என்ற பாட்டின் தோற்றத்தைப்
பற்றி விளக்கம் தர இது சரியான தருணம்.அப்பாடல் நமது இயக்கத்திலே ஒரு நாடோடிப் பாடலாக
மாறி விட்டது. யார் எப்பொழுது எழுதினார்கள் யார் இசையமைத்தார்கள் என்ற விளக்கமேதுமின்றியே
1947 ஆம் ஆண்டிலிருந்தே அது ஒரு இயக்கப்பாடலாக மாறிவிட்டது. அப்பாடலின் வலிமை அது.
‘ என்று குறிப்பிடுகிறார்.
பொதுவுடமை
இயக்கத்திற்கென்றே தனது இசை வாழ்க்கையை அர்ப்பணித்த இசை மேதை எம் பி சீனிவாசன் இப்படித்தான் வெளிப்படுத்துகிறார்.
அந்தப் பாடல் இதுதான்;
விடுதலைப்
போரினில் வீழ்ந்த மலரே தோழா! தோழா !
வீரர் உமக்கே வணக்கம் வணக்கம் தோழா! தோழா!
காரிருள்
சூழ்ந்த கரிய வானத்தே
தாரகை போன்று ஜொலித்தி நிற்கின்றீர்
போராடும் எமக்கு புத்தியிர் தாரீர் தோழா !தோழா
(விடுதலை)
இந்திய நாட்டின் விடுதலைப் போரில்
எண்ணற்ற வீரர்கள் அர்ப்பணம் செய்தோம்
இதயக் கனவுகள் ஈடேறும் சத்யம் தோழா! தோழா!
(விடுதலை)
ஆயிரம் ஆயிரம் வீரர்கள் ரத்தம்
குடித்தெழுந்தே நிற்கும் கோரச்சமூகம்
தகர்த்தெறிவோம் ஜனசக்தியினாலே
தோழா ! தோழா!
(விடுதலை)
மதுரைக்கு நான் சென்ற பிறகு அந்தப் பாடலை அங்கிருந்த
மாணவத் தோழர் சங்கர் ராஜூவக்கு முணு முணுத்துக் காட்டி அதற்கு நல்ல வரிகளை எழுதிப்
தரும்படி அவரிடம் கேட்டிரிந்தேன். கலை இலக்கிய ஆர்வம் படைத்த சங்கர் அருமையாக பாடிக்
கொண்டிருந்த தோழர். அவர்தான் ‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே தோழா தோழா’ என்ற வரிகளை
நான் ஏற்கனவே அமைத்திருந்த மெட்டுக்கு எழுதியிவர். தோழர் மணவாளனும் இந்தப் பாடல் எழுதப்படும்
போது உடனிருந்து உதவியளித்தார் எங்களுடன் சேர்ந்து இதைப் பாடினார் மாநாட்டுக்கு வந்திருந்த
ஜீவா இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு என்னைத் தட்டிக்கொடுத்து ‘அருமையான இசையமைப்பு’ என்று புகழ்ந்தார். இன்று நான் தொழிலாகக் கொண்டிருக்கும் இசையமைப்புப்
பணி இந்தப் பாடலுடன் துவங்கியது என்று சொல்வது மிகவும் சரி.’
இந்த நூலின் விவரங்களைப் படித்தவுடன் பிரமித்துப்போனேன்.
என்னதான் வறுமையிலிருந்து படித்து முன்னேறியவுடம், தலைகால் புரியாமல் ,தானுண்டு தன்
குடும்பம் உண்டு என்று சுயநல கூடாரத்தில் அடையக்கூடியவர்கள் ஏராளம்பேர் இருக்கின்ற
சமூகத்தில், எளியவர்களுக்கென்று உதவி செய்ததோடு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களையே
அடையாளங்கண்டு அவர்களின் முன்னேற்றத்தில் ஒரு கருத்தியலில் தன்னை ஆட்படுத்திக்கொண்டு
இளம் வயதில் அவர் ஏற்றெடுத்த தத்துவமும் கல்லூரியில் படிக்கும்போது தான் பொதுவுடமை
இயக்கத்திற்கென்றே சிந்தனையையும் செயலையும் அர்ப்பணித்ததால்தான் அவர் உயர்ந்து நிற்கின்றார். இப்படிப்பட்ட மகத்தான உள்ளம் படைத்தவரின் தொடர்பு
ஒரு பத்தாண்டு காலம் இல்லாமல் போனது மட்டுமல்ல, அவரோடு நேரடி யாக உரையாடியிருந்தால்
இன்னும் ஏராளமாக அனுபவங்களை அள்ளி எடுத்திருக்கலாம் அது விடுபட்டுப் போனதே என்ற கவலையோடு
, அவரை அடக்கம் செய்த அடுத்தநாள் நானும் என்னை முதல்முதலாக அவரை அறிமுகம் செய்துவைத்த
அவரின் பழைய மாணவனும் அவரின் அன்புக்கு அடிமையாகிப்போன மாதவனும் அவரின் வீட்டுக்குச்
சென்றவுடன் நினைவலைகளைக் கண்ணீரில் கரைத்து உதிர்த்தேன் கனத்த இதயத்தோடு .
அவர் இளமையில் பாடிய அந்த இயக்கப் பாடலை
நான்கு வரிகளை தனது மகள் திருமதி வித்தியாவிடம் பாடுவாராம் அதன்பிறகு நினைவுக்கு வரவல்லை
என்று கவலைப்பட்டிருக்கிறார். மூட்டா முகாமில் பாடிய அப்பாட்டின் மெட்டில் அவரின் மகள்கள்
மருமகன் மகன் ஆனநத் ஆகியோர் மத்தியில் ‘விடுதலைப்
போரினில் வீழ்ந்த மலரே தோழா! தோழா!’ என்ற பாடலை பாடியே அஞ்சலி செலுத்தினோம்.இப்படி
கல்விப் பணியில் தூய உள்ளத்தோடு அதிகார வேட்கையை
தூக்கி எறிந்துவிட்டு,அடித்தட்டு மக்கள் வாழ்வின் முன்னேற்றத்தில் நாட்டம் கொண்டோர்
வெகு சிலரே.அந்த சிலரில் இணை இயக்குநர் என்பதை விட அவர் கல்வித் துறையில் ஜொலித்த செந்தாரகை
தோழர் சங்கரராஜூலு. அவரின் சிந்தனையும் உள்ளக்கிடக்கையும் இன்னும் ஒளிவீசும் அக்கினிக்
குஞ்சுதான்.