Sunday, November 28, 2010

நாங்கள் அரிசனங்களாம் - தணிகைச்செல்வன்.

கண்ணகியார் வீசிவிட்ட மதுரைவீதியிலே -அன்று
கருகிப் போன மக்கள் எங்கள் ஜாதிமக்களே
கண்ணகி போய் ஒசந்த குல ஜனங்கள மட்டும்-அவள்
காப்பாத்துனா பிறகு யாரு நாங்கதான் மிச்சம்!

பெரியசாதி கும்பிடிற சிதம்பர சரமி-அதை
பறையசாதி பார்த்ததாலே வந்தது தீமை
எரியவச்சான் நந்தனாரின் உயிரையே கொன்னு-பிறகு
எழுதிவச்சான் ஜோதியிலே கலந்துட்டாருன்னு

வெந்து வெந்து நொந்து நொந்து இன்றுவரையில்-நாங்க
நூறு நூறு ஆண்டுகளாய் இந்த பூமியில்
சொந்தமென்று என்ன கண்டோம் உசிரைத் தவிர-எங்கள்
சொத்து என்று என்ன கண்டோம் பசியைத் தவிர!

 மத்தியப் பிரதேசத்திலே காலார் ஜில்லா கிராமத்திலே- எங்கள்
மங்கையரைக் கற்பளித்தார் லாக்கப்புக்குள்ளே
சித்திரவதையானதுங்க எத்தனை பெண்ணு-அது
செய்தியாக வருவதுண்டா நூத்துக்கு ஒன்னு.

அரிசனமும் பிறசனமும் ஒருசனமானால்
அன்றுதாங்க சுதந்திரமும் ஒரிஜனலாகும்
ஒரிஜனல் சுதந்திரத்தைப் பார்த்திட வேண்டுமென்றால்
ஒன்றுபட்டு போர்க்கொடியை தூக்கிடவேண்டும்.

பறையடிச்சதாலே எங்கள பறையனுன்னு பேருவச்சீங்க
வேளாண்மை செஞ்சதாலே வேளாளருன்னு ஜாதிவச்சீங்க
பறையரெல்லாம் வேளாண்மைதான் செய்யுரோமுங்க-இப்போ
எங்க பேரு வேளாளருன்னு சொன்னா என்னங்க!
முந்திக்காலம் போல இல்லே இந்த காலங்கள்-ரொம்ப
முன்னேறிட்டோம் என்பதெல்லாம் வார்த்தை ஜாலங்கள்
இந்தியாவின் எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும்-அய்யோ
எங்கசனம் அனுபவிக்கும் கொடுமை ஏராளம்.

செங்கொடியைத் தவிர போர்க்கொடி இல்லை-அது
செல்லும் வழிதவிர மார்க்கமுமில்லை
சங்கங்கள் தவிர வேறு ஸ்தாபனமில்லை-மார்க்ஸியக்
கொள்கையைத் தவிர வேறு கொள்கயேயில்லை.
       இப்படியாக மொத்தம் 22   பத்திகள் அச்சிட்டு 1977 ல் பரமக்குடியில்
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் வழங்கப்பட்ட
பிரசுரமே சிந்தனையைத் தூண்டியது. பொதுவான மக்கள் எழுச்சியில்தான்
தலித் மக்களின் விடுதலையும் அடங்கியுள்ளது என்பதை உணரமுடிந்தது.