Thursday, April 7, 2016

Old Shirt and Drowser A short story



கிழிந்த சட்டை, டவுசர்

                                                                  முனைவர.க.கணேசன்,                                                                                 கொட்டாரம்
கொட்டாரம்கோல்டன்குமார் டெய்லர்கடைக்கு காலை ஒன்பதுமணிக்கு,பழையபள்ளிக்கூடயூனிபாஃம்கிழிசலைத்தைக்கவந்திருந்தஒரு பதிமூன்று வயசு பையனிடம்  ‘இதை எப்படிப்பா  தைப்பது ரொம்பவும் நஞ்சு போய் கிடக்குது ஒட்டுப் போட்டாலும் நல்லா இருக்காது’  என்று சொல்லி மூளையக் கசக்கிகிட்டு இருந்தார். ‘எப்படியாவது கொஞ்சம் முயற்சி பண்ணிப் பாருங்கண்ணேயூனிபாஃம்  போடாம ரெண்டு நாளா வாத்தியார் வகுப்புக்கு வெளியே நிறுத்திட்டாரு’ அம்மாகிட்டேயும் கையில பணம் இல்லை, அடுத்த வாரந்தான் கெடைக்குமாம்’ எனக் கெஞ்சிக்கொண்டிருந்தான்.
                எனது புது ரெடிமேடு பேண்டின் உயரத்தை குறைப்பதற்காக தையல் கடைக்கு போனபோதுதான்  இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிலைமையை பார்த்துக்கொண்டிருந்த எனது மனசு என் பதினைந்து வயது பள்ளிக்கூட காலத்துக்கு பின்னோக்கிப் பயணப் பட்டது.திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீகண்டராசபுரம் எனும் குக்கிராமம். பத்து வயதில் அப்பா இறந்த பிறகு தம்பி தங்கை அம்மவோடு அம்மா பிறந்த ஊருக்கு பாட்டி அழைத்துக்கொண்டு போனது.
                  ஆறாவது வகுப்பில்  நாலு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வேடசந்தூர் உயர்நிலைப் பள்ளியில் எனது பக்கத்து வீட்டு சித்தப்பா சுப்பையா தனது மகன் சௌந்திரத்தோடு என்னையும் சேத்துவிட்டு, நோட்டு புத்தகமெல்லாம் வாங்கிக்கொடுத்தார். யூனிபாஃம் பள்ளிக்கூடத்தில் ரெண்டு செட் கொடுத்தார்கள்.அது கெட்டியான காடாத் துணியில் தைத்த சட்டை டவுசர் . அந்த உடையத்தான் வாரத்திற்கு ரெண்டு நாட்கள்  வருசம் முழுவதும் துவைத்து துவைத்து உடுத்தி பள்ளிக்கு சென்றேன். அந்த ரெண்டு நாட்கள் போக மீதி நாட்களுக்கு கலர் உடைகள் உடுத்துவதற்கு வாங்குவதற்கு வீட்டுல ரொம்ப சிரமமாக இருக்கும்.
              புதிய உடைகள் வாங்குவதற்கென்றே பள்ளி விடுமுறை காலங்களில் அம்மா செல்லக்கூடிய விவசாயக் கூலி வேலைக்கு செல்வேன். கவுண்டர் வீட்டு பண்ணையார்கள் அப்பா இல்லாத பையன் அதுவும படிக்கிற பையன் பரவாயில்ல வந்துட்டுப போகட்டும் என சேர்த்துகொள்வார்கள்.கடலைக்காடு , எள்ளுக்காடு, நெல்வயல் மிளகாய், வெங்காயப் பாத்திகள் களை எடுக்க கவுண்டர் இனத்திலும், ஆத்துப்பட்டி வெள்ளாளத் தெருவிலிருந்தும்,, ஊருக்கு கிழக்கே இருக்கிற எங்க சேரித் தெருவிலிருந்தும் நிறையப் பேரு கூட்டங்கூட்டமாக வேலைக்கு வருவார்கள் ,அவர்களோடு  வேலைக்கு போகக் கூடிய சிறுவன் நான் மட்டும்தான்..எனஅம்மாவும்   பக்கத்திலஇருக்கிறவங்களும்களைக்கொத்துலஎள்செடியோ, கடலச்செடியோ வெங்காய செடியோ,மிளகாச் செடியோ காயப்படாம, செடிகளுக்கு இடையில் இருக்கும் களையை மட்டும் எப்படி வெட்டிக்கிட்டே போகணும் என்பதை சொல்லிக் கொடுப்பார்கள். காலை ஒன்பது மணிக்கெல்லாம் வேலையத் தொடங்கினால் சாய்ந்திரம் மூனு மணிக்கெல்லாம் கரையேறிறலாம். இடையில்  அரை மணிநேரம் மதியச் சாப்பாடு சாப்பிட நேரம் கிடைக்கும்.தூக்கு வாளியில கொண்டு போன சோளக் கஞ்சிய மதியத்தில் குடுச்சுப்புட்டு வேளையத் தொடங்குவோம்.
.       களை எடுப்பதற்கு ,ஒவ்வொருத்தருக்கும் நிறை அளந்து விடுவாங்க ( களை எடுக்கும் பகுதி அளவு) எல்லோரோடும் சமமாக களை எடுத்துக்கொண்டு போகவேண்டும் பிந்தக்கூடாது. அப்படி வேலைக்கு போன ஆரம்ப நாட்களில் என் அம்மாவின் பக்கத்திலேயே எனக்கு நிறைய பிடிச்சு ,அம்மாவின் பகுதிகளை களையெடுக்கும்போதே என் நிறைப்பக்கம் அம்மாவின் களைக்கொத்து  வந்து வந்து போகும். அப்பத்தானே சமமாக இழுத்துகொண்டு போக முடியும்? .
         சில நேரங்களில் எனக்கு இன்னொரு பக்கத்தில இருக்கும்  ஆத்துப்ப்பட்டி வெள்ளாளத்தெரு பேச்சியம்மா அக்காவும் என் அம்மா போலவே என் நெறையிலயும் களை எடுத்துகிட்டு போகும்..
 ஒரு மாதத்திற்கு பிறகு அவங்க உதவி இல்லாமலே வேகமா அவுங்களோட களையெடுத்துகிட்டு போவேன். வேலைக்கு வரக்கூடிய கவுண்டர் வீட்டுசுப்பம்மா  என்மேல கரிசனத்தோட ‘ ஆமா  பொய் சொல்லியும் திருடியும்தான் பொளைக்கக் கூடாது  உளச்சி சாப்பிடுறதுல என்ன தப்பு இருக்குது?’ என  சொல்லும்போது எனக்கு தெம்பாக இருக்கும். வெட்கமெல்லாம்  போய்விடும்.
            ‘வேலாயி மகன் கணேசு பரவாயில்ல ஊருல இருக்கிற பையமாரெல்லாம் இப்படியா இருக்கிறானுக? அவன்  படுற பாடுகளுக்கு பின்னால நல்லா வருவான்’ என்று எங்க கூட வேலைக்கு வருகிற வெள்ளாளவீட்டு ராமுத்தாயி சொல்லும்.
     நல்ல வெயிலில் வேலை செய்வதால் தண்ணீர் தாகம் எடுக்கும். கவுண்டர் வீட்டு பெரிய பானையில் தண்ணி வச்சிருப்பாங்க. தண்ணி வேனுமின்னு கேட்டா, யாராவது கவுண்டர் வீட்டு பொம்பளையோ அல்லது வெள்ளாள வீட்டு பொம்பளையோ வந்து சொம்புல கோரி என் கையில ஊத்துவாங்க ,நான் ரெண்டு கைகளையும் குவிச்சு வாயில வச்சு ஒரு சொட்டு தண்ணி கீழே விடாம குடிப்பேன். ஏன்னா ஊருல தாழ்ந்த சாதி காரங்களுக்கு இப்படித்தான் ஊத்துவாங்க. பழக்கப்பட்டு போன ஒன்னுதான். ஒதுக்கி வச்ச சாதி மக்களுக்கு பண்ணையாரு வீட்டில தண்ணி வாங்கி குடிக்கிறதுக்கும், கஞ்சியோ , சோறோ வாங்கி சாப்பிடுவதற்கும் எங்க ரெண்டு உள்ளங்கைகள்தான்  சாப்பாட்டுத் தட்டும் டம்ளரும்.அந்த புரியாத வயசில என் அம்மாகிட்ட கேட்டேன் ‘ஏம்மா அவுங்க மட்டும் சொம்புல கோரி அப்படியே குடிக்கிறாங்க நமக்கு ஏன் கையில ஊத்துராங்க?’ ன்னு கேட்டேன். அவங்கெல்லாம் மேல் சாதிப்பா நாம கீழ்சாதி அவுங்க தொட்ட பாத்திரத்தை நாமளும் நாம தொட்ட பாத்திரத்த அவங்களும் தொடக்கூடாது’ன்னு அம்மா சொன்னது.
                   
             எங்கஅம்மாபாட்டிஎல்லோரும்ஒருபண்ணைக்காரதோட்டத்துக்கு எல்லா வேலைகளுக்கும் போவாங்க. அங்க லீவு நாட்களில் போவேன். மதிய நேரமாக ஆச்சின்னா , பண்ணைக்காரம்மா கம்புத்தானிய கஞ்சியில நல்ல கெட்டியா இருக்கும் எருமை மாட்டு மோர் கலந்து கையில ஊத்தும் . அந்த ருசியே தனியாக இருக்கும். அப்பவெல்லாம் எனக்கு தெரியாது கையில வாங்கிக் குடிக்கிறது ஒரு தீண்டாமை எளவுன்னு. இப்படியே லீவு நாட்களில் வேலைக்கு போனா ஒரு நாள் கூலிஅஞ்சு ரூபா.
        பள்ளிக்கூட காலாண்டுபரிச்ச லீவு, அரையாண்டு பரிச்ச லீவு கூலி வேலையிலேயே ஓடிப்போயிரும். சேத்து வச்ச ரூபா ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தையில புதுச்சட்டையும் டவுசருமா வீடு வந்து சேரும். எங்க பண்ணைக்கார வீட்டில பத்தாம் வகுப்பு படிச்சிகிட்டு இருந்த பத்ம கோபாலு அவரோட பழைய சட்டைகளை சிறுசா இருக்கிற நல்ல டெர்லின் சட்டையும் நல்ல டவுசரும் கொடுப்பாரு. அனைப்பட்டி கிருஷண்ன வீட்டுக்கு அவங்களோட நெல், சோளம் தானியத்தை அரைமூட்டையாக சைக்கிளில் வைத்து பூத்தாம்பட்டி ரைஸ்மில்லில் கொண்டு போய் அரச்சிட்டு வந்து கொடுப்பேன். என் உழைப்பைப் பாத்திட்டு அணைப்பட்டி கிருஷணனும், சொக்கலிங்கமும் சேந்து எனக்கு புதுசா சட்டையும் டவுசரும் எடுத்துக் கொடுத்தாங்க. இப்படியேதான் என் பள்ளிக்கூட வாழ்க்கை பயணப்பட்டது.
                 எட்டாம் வகுப்பு படிக்கும்போது  ஒருநாள் பள்ளிக்கூடத்துக்கு போகாம வயிற்று வலின்னு லீவு லெட்டர் எழுதி  எங்க வகுப்பு பையன் மூலமா வகுப்பாசிரியருக்கு கொடுக்கச் சொல்லிட்டு எங்க ஊரு சித்தப்பா, அண்ணன் மாரோட  செத்த வீட்டுக்கு அடிமைத்தொழிலான பறையடிக்க போயிட்டேன்.
                      பள்ளிக்கூடத்தில அப்பவெல்லாம் நான்தான் காலையில் தினமும் இறைவணக்கம் பாடுவேன். அந்த எளவு வீட்டுக்கு வந்திருந்த பள்ளிக் கூடத்தில வேலை செய்யுற உள்ளூரு  வாத்தியார் என்னப பாத்துப்புட்டாரு. அவரு உடனே என் வகுப்பு ஆசிரியரான வேதநாயகம் சாருகிட்ட சொல்லிக்குடுத்துட்டாரு.
           அடுத்த நாளு வகுப்புக்கு போனபோது என் வகுப்பு வாத்தியார் வேதநாயகம் என்னை தனியாக கூப்பிட்டாரு. நான் பயந்துகிட்டே அவரு பக்கத்துல போனேன். ‘நேத்து உனக்கு உண்மையா வயித்து வலியா ? இல்ல வேற எங்கேயும் போனியா?’ ன்னு கேட்டாரு. நான் கொஞ்ச நேரம் தலையக் குனிஞ்சு மௌனமாக இருந்தேன். ‘சும்மா சொல்லுடா ஒன்னைய நான் ஒண்ணுஞ்செய்யமாட்டேன் ‘ன்னு சொன்னதும் உண்மையச் சொன்னேன். ‘கொஞ்சம் காசு கெடைக்குமுன்னு எளவு வீட்டுக்கு தப்படிக்கப் போனேன் சார்’ ன்னு சொன்னேன். வீட்டுல எத்தனைபேரு இருக்கீங்க’ ன்னு கேட்டாரு. ‘அம்மா, தங்கச்சி தம்பி, பாட்டி நாலு பேரு சார்’ என சொன்னேன். ‘அப்பா  இல்லையா?’ ன்னு கேட்க ‘ அப்பா நான் அஞ்சாம் வகுப்பு படிக்குபோது செத்துப் போயிட்டாரு சார்’ன்னு சொன்னதும் வேதநாயகம் சார் கொஞ்ச நேரம் தலையக் குனிஞ்சு அவருக்கு ஒன்னும் ஓடல   மௌனமா இருந்தவரு ‘ ம் சரி நாளைக்கு ஒன்னோட அம்மாவை கூட்டி வா உன்னைய அரசு ஹாஸ்டலில் சேர்க்க அவுங்ககிட்ட பேசணும் ‘ ன்னார்.
             அடுத்த நாள் அம்மாவை கூட்டி வந்தேன். அம்மாகிட்டே ‘ யம்மா பையன் நல்லா படிக்கிற பையன் அவனை இந்த சின்ன வயசிலேயே தப்படிக்க போகச் சொல்றது, வேலைக்கு போகச் சொல்றது கூடாது. நான் ஹாஸ்டல் வார்டனுகிட்ட சொல்லி ஒம் பையன சேத்துக்க சொல்றேன். அவன் வீட்டுலயிருந்து நாலு மைல் நடந்து வரவேண்டாம்.’ என சொன்னதும் அம்மா கையெடுத்து கும்புட்டுச்சு.
       கவலைப் படாதம்மா  ஹாஸ்டலுக்குப் பக்கந்தான் என் வீடு அவனை நான் அடிக்கடி பாத்துக்கிறேன். என் பிள்ளைகளோட இவனையும்  கவனிச்சுக்கிறேன்.’ எனச் சொல்லி அம்மாவை போகச் சொல்லிட்டார்.இது என் வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் திருப்புமுனை.அரசு விடுதியில எட்டு , ஒன்பது பத்து,பதினொன்னாம் வகுப்பு வரை காலம் உருண்டோடுச்சு.
          இருந்தாலும் லீவு நாட்களில் ஊருக்குப் போயி அம்மாவோட வேலைக்குபோறதும்,எளவுகல்யாணம்,கோயில்திருவிழாநிகழ்ச்சிகளுக்குஅடிமைத்தொழிலான தப்படிக்கிறது நிக்கலை. காரணம் வீட்டுச் செலவுக்கு காசு பத்தாது.அம்மா ஒன்னுமட்டும் கஷ்டப் படுதேன்னு என் மனசு கேக்கலை.
                                           பதினோராம்வகு்ப்புமுடிச்சுஹாஸ்டலில் மாணவர்கள்குரூப்போட்டோஎடுக்கணும்.பள்ளிக்கூடத்திலும் குரூப் போட்டோ எடுக்கணும். என்கிட்ட நல்ல சட்டை இல்லை.
           என்.கூடப் படிக்கிற ஜோதிமணி எஸ்டேட்டில அவனோட அம்மா அப்பா வேல செய்ததாலே , நல்ல உடைகள் நிறைய வச்சிருப்பான். அவங்கிட்ட ஒரு சட்டையும் டவுசரும் வாங்கி பள்ளியில 11 வகுப்பு மாணவர்களும் தலைமையாசிருயர் சேர்ந்து போட்டோ எடுத்தோம். பிறகு விடுதியிலேயும்  வார்டனோட சேர்ந்நு போட்டோ எடுத்தோம்.
                நாற்பத்தைந்து வருஷங்களுக்குப் பிறகு கொட்டாரம் கோல்டன் குமார் டைலர்  கடையில் அந்த எட்டாம் வகுப்பு மாணவன் கந்தலாக இருந்த தன்னோட டவுசர தைப்பதற்கு கெஞ்சிக் கொண்டிருந்தபோது என் கண்கள் குளமாயின, நெஞ்சம் கனத்தது. உன் அப்பா என்ன செய்றாருன்னு கேட்டேன். அப்பா இல்ல ,அம்மா தங்கை இருக்கிறாங்க சார் என சொன்னான். தையல் கடைக்காரரிடம் ‘அதை தைக்காதிங்க  ‘டவுசருக்கும் சட்டைக்கும் எவ்வளவு துணி வேனுமின்னு கேட்டேன்.
  அவர் சொன்ன அளவு வெள்ளைச் சட்டைக்கும், காக்கி நிற டவுசருக்கும் துணிய பக்கத்து ஜெகன் டெக்ஸ்டைலில் எடுத்துக் கொடுத்துவிட்டு என் கடந்த கால கதறல் மீண்டும் வந்ததை என் மனதிற்குள்ளேயே புதைத்துக்கொண்டேன்.
            இப்படி சம்பவம் நடக்குமுன்னு எதிர்பார்க்காத அந்த எட்டாம் வகுப்பு பையன் என் காலில் விழுந்தான். டே தம்பி எழும்புடா உன்னைப் போல் பையனுக்கு இந்த சிறு உதவி செய்யுறதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கனுன்டா. உனக்கு என்ன உதவின்னாலும் கேளுடா என்னால முடிஞ்த செய்யுறேன் நீ நல்லா படிக்கணும் என்னைப்போல ஆசிரியராக நீயும் பின்னால வரணும்’ என சொன்னபோது அவன் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டேன். தையல் கடைக்காரர் அவரும் வசதியில்லாத பையன்களுக்கு ரூபா வாங்காம தைச்சு கொடுக்கிற, ரத்ததானம் கழகம் வச்சிருக்கிற நல்ல உள்ளம்.அவருகிட்ட தையல் கூலி கொடுத்தேன். அதை அவர் வேண்டாமென சொல்லிவிட்டார். ‘நீங்க செஞ்ச உதவியில நானும் சிறு பங்காக இருக்கட்டும்சார்’ கோல்டன் குமார்  என்னை ஆச்சரியமான சந்தோசத்தோடு பார்த்தார். அன்று கல்லூரிக்கு பி.காம் வகுப்புக்கு முதல் பீரியடு பாடம் எடுக்கப் போனபோது அந்த எட்டாம் வகுப்பு படிக்கிற பையனோட உருவம்மனசில இருந்துகிட்டு இயல்பான நிலைமைக்கு வர ரொம்ப நேரம் ஆனது.