Friday, June 14, 2024

 

.         நம் தமிழ்நாடு                                                                                                                              2

புதுமை கண்டு வாழ இன்று

போர் செயுந் தமிழ்நாடு- மறப்

போர் செயுந் தமிழ்நாடு-மிக

முதுமை கொண்ட மடமை வீழ

மோதிடும் தமிழ்நாடு-வீழ

மோதிடும் தமிழ்நாடு                            ( புதுமை)

 

திசையை விண்ணை வென்று நின்று

சிரித்திடும் தமிழ்நாடு-எழில்

சிரித்திடும் தமிழ்நாடு-கொடி

அசைய உயர மண்ணில் நிற்கும்

கோபுரம் தமிழ்நாடு-கலைக்

கோபுரம் தமிழ்நாடு                                      ( புதுமை)

 

 

காவிரி பாயுங் கழனி

கண்ணொளி பெறும் நாடு-முக்

கண்ணொளி பெறும் நாடு-பொழில்

பூவிரிநறும் புனல் விரிந்திடும்

பூங்கொடி  தவழ்நாடு-தமிழ்

பூங்கொடு தவழ்நாடு                                             ( புதுமை)

                               

 

கைகள் வளையின் ஒலியும் அலையும்

கவிதை பேசும் நாடு-நற்

கவிதை பேசும் நாடு-நம்

கைகள் தழுவிக் காதல் புரியக்

கன்னியர் வளர்நாடு-இளங்

கன்னியர் வளர்நாடு                                                    ( புதுமை)

 

 

அலையும் சிலம்பின் இசையும் மலரும்

அவிழ்ந்திடும் தமிழ்நாடு-மலர்

அவிழ்ந்திடும் தமிழ்நாடு-பனி

மலையும் பொதிய மலையும் உறவில்

பொங்கிய தமிழ்நாடு-மணம்

பொங்கிய தமிழ்நாடு                                                     ( புதுமை)

 

 

கிளியி னோடு பழகுங் காதல்

கிளிகள் பேசும் நாடு-பெண்

கிளிகள் பேசும் நாடு-புவி

வெளியில் நடனம் பயிலும் அலையின்

நாதம் பொங்கும் நாடு-கடல்

நாதம் பொங்கும் நாடு                                                       ( புதுமை)

 

 

கம்பன் தந்த அமுத முண்டு

களித்திடும் தமிழ்நாடு-உளங்

களித்திடும் தமிழ்நாடு-பசுங்

கொம்பர்மீது குயில்கள் கவிதை

கொஞ்சிடும தமிழ்நாடு-இசை

கொஞ்சிடும் தமிழ்நாடு                                       ( புதுமை)

 

 

காலம் என்ற கடலின்மீது

கப்பலோட்டும் நாடு-புகழ்க்

கப்பலோட்டும் நாடு-இந்த

ஞாலமென்ற மேடை கண்ட

நாடகத் தமிழ்நாடு-ஒரு

நாடகத் தமிழ்நாடு                                                 ( புதுமை)

 

 

 

உப்பு விளையும் முத்து விளையும்                                                                                                                          3

உணவு விளையும் நாடு-நல்

உணவு விளையும் நாடு-ஓர்

ஒப்பிலாத உரிமை கொண்ட

உணர்வு விளையும் நாடு-தமிழ்

உணர்வு விளையும் நாடு                                             ( புதுமை)

 

கவிஞர் தமிழ்ஒளி      அமுதசுரபி  1951

 

                           

 

No comments:

Post a Comment