எங்க கடலம்மா!
நீலச்சேலை கட்டியிருக்கும்
எங்க கடலம்மா
நீவழங்கும் அருங்கொடையால்
உலகம் வாழுதம்மா!
விவசாய முதுகெலும்புக்
கிணையாய் நின்றே
மக்கள் வாழ்வை காத்து நிற்கும்
சமுத்திரத் தாயே! (நீலச்சேலை)
பூமிப் பந்தின் நுரையீரல்
நீயேதானம்மா!-உலகில
உயிர்கள் வாழ ஆக்ஸிஜனும்
உன்னால்தானம்மா!
ஊட்டச்சத்தின் பிறப்பிடமே
நீயே கடலம்மா!-உலக
மக்கள் பசியைப் போக்குகின்ற
அன்புத் தாயம்மா! (நீலச்சேலை)
வகைவகையாய் மீன்கள் தந்து
வாரியணைக்கிறாய்-எங்கள்
வாழ்வாதாரம் பெருக்கிடவே
வழியும் அமைக்கிறாய்!
ஏற்றுமதி அதிகரித்து
நாட்டைக் காக்கின்றாய்-இந்த
ஆதித்தாயை என்றும் போற்றி
சந்ததி காப்போம்! (நீலச்சேலை)
உன்அலையில் கால்பதித்து
உல்லாசம் காண்போம்-உன்
அலைமடியில் ஆடிப்பாடி
ஆனந்தம் கொள்வோம்!
உப்பிட்டு உன்னும்போது
உன்னை நினைப்போம்!-உனை
சீர்குலைக்க எவர்வரினும்
கேடையாமாவோம்! (நீலச்சேலை)
No comments:
Post a Comment