Friday, November 18, 2011

'வாச்சாத்தீ'-நம் போர் இன்னும் முடியவில்லை.


' மத்தியப் பிரதேசத்திலே காலார் ஜில்லா கிராமத்திலே-எங்கள்
மங்கையரை கற்பழித்தார் லாக்கப்புக்குள்ளே
சித்திரவதை யானதுங்க எத்தனை பொண்ணு -அது
செய்தியாக வருவதுண்டா நூத்துக்கு ஒன்னு' 

 பொருத்ததெல்லாம் பொருத்தோம் ஒரு புண்ணியமில்லே-காந்தி
போதனைகளாலே எங்க புண்ணும் ஆரல
 இந்தியாவின் எந்தப் பக்கம் திரும்பிப் பாத்தாலும-அய்யோ
எங்க சனம் அனுபவிக்கும் கொடுமை ஏராளம்.'
என்று 1977 ல் தணிகைச் செல்வன் கவிதையைப் போல இந்தியா முழுவதும் தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு அளவே இல்லை. இன்னும் தொடரத்தான் செய்கின்றன. முன்பு போல முழுவதும் வெளி உலகத்துக்கு வராமல் போனாலும்,பத்திரிக்கைகளின் மனச்சாட்சி அவ்வப்போது அரும்பத்தான் செய்கிறது. கொடியங்குளம்.நடுநாலுமூலைக் கிணறு,தாமிரபரணி படுகொலை, தஞ்சை கீழவெண்மணி,நெற்குப்பை,தென்மாவட்டக் கலவரங்கள் வட இந்தியாவில் கயர்லாஞ்சி, உஞ்சனை படுகொலை, சிதம்பரம் காவல் நிலையக் கற்பழிப்பு,அருந்ததியர் என்பதற்காக ,திருநெல்வேலி தாழையூத்து கிரூஷ்ணவேணி பஞ்சாயத்து தலைவியாக அமரவிடால் வெட்டுப்பட்டது, மேலவளவு, பாப்பாபட்டி,கீரிப்பட்டி,கொட்டகச்சியேந்தல் ஆகிய பஞ்சாயத்துகளில் தலித்துகளை தலைவர்களாக ஏற்றுக் கொள்ளாமை, இவைகளுக்கெதிராக ஜனநாயக சக்திகள் போராடினாலும் முழுமையான சுயமரியாதை அடையாமல் இருப்பதன் தொடர்ச்சியே வாச்சாத்தி மலைவாழ் மக்களுக்கு ஏற்பட்ட தேச அவமானமும்,அதற்கெதிராக இயக்கம் நடத்தியமைக்கு கிடைத்த வெற்றி என்றுதான் வரலாறு பதிவு செய்கிறது.மலைவாழ்மக்கள் பட்ட அவமானங்களுக்குத்தான் இத்தீர்ப்புதற்காலிக மனரீதியான நிவாரணமே,இவர்களுக்காக துணைநிற்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உட்பட சமூக வெகுஜன அமைப்புகள் போராடி வருவது நிலத்துக்காகவும்,பொருளாதார பங்கீட்டுக்காகவும்தான என்ற புரிதலோடுதான் வாச்சாத்தி தீர்ப்பையும் பார்க்க வேண்டும். 
    'இந்த தீர்ப்பு பெண்ணென்றால் காமவிளையாட்டுக் கருவி என்று கருதும் மனப்பான்மைக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை...19 ஆண்டுகளாக அந்தப் பெண்கள்  மன உளைச்சல் என்னும் தண்டனைக்கு ஆளாகியுள்ளார்களே அதற்கு என்ன பரிகாரம் தேடமுடியும்?' என்று" விடுதலை" அக்டோபர் 1,2011தலையங்கம் கேட்கிறது.
            ' பாதிக்கப் பட்டவர்கள் தேசிய நீரோட்டத்துக்கும் ஊடக விளிம்புக்கும் அப்பால் வசிக்கும் மலைவாழ் மக்கள் என்பதுதான் காரணம். குரலற்ற ஏழைகள் என்பதால் தாக்குதல் படைக்கு ஊக்கம். தப்பு வெளிச்சத்துக்கு வராது ,வந்தாலும் அதிகாரத்தை பயன்படுத்தி அமுக்கி விடலாம் என்பது அதிகார வர்க்கத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை' என்று அக்டோபர் 1,2011 தினகரன் தலையங்கம் பேசுகிறது.
                   ' வாச்சாத்திக்குள் புகுந்த அரசு அலுவலகங்களில் கீழ்நிலைப் பணியாளர்கள் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட அதே சமயத்தில், உயர்மட்ட அதிகாரிகள் அவற்றைத் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இக்கொடூர நிகழ்வுகளை மறுத்திடவும், மூடி மறைத்திடவும் அரசின் உயர்மட்ட அளவில் அதிகாரிகள் முயற்சித்ததிலிருந்து இத்தாக்குதல்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளும் அனுமதி அளித்திருப்பதையே காட்டுகின்றன.' அக்டோபர் 1,2011 தி இந்து நாளிதழ் தலையங்கம் உரைக்கிறது
 ஒரு கிரிமினல் வழக்கில் காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த 215 அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ள தண்டனை என்பது முன்னெப்போதுமில்லாத ஒன்றாகும். அதேபோல் 1992 ஜூன் மாதம் 20 ஆம் தேதியன்று தர்ம்புரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தியில் நடைபெற்ற சம்பவங்களும் அதற்குமுன் வேறெங்கும் நடைபெறாதவைகளாகும் என 1-10-2011ல் தி நீயூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  இதழ் தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பது மிகச் சரியானது..
வீடுகளிலிருந்து இழுத்துவரப்பட்ட பெண்களை மந்தையிலே நிறுத்தி  பதினெட்டுப்பேரை மட்டும் தேர்ந்தெடுத்து, பக்கத்தில் உள்ள ஏரிக்கு கூட்டிச்சென்று வன்புணர்ச்சி செய்ததை இப்பொழுது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது.எங்களை விட்டுவிடுங்கள் என்று காலில் விழுந்து கதறியதைக்கூட  கண்டு மனமிறங்காத மிருகமாக நடந்து கொண்டார்கள்
   எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துகிட்டுப் போய் விசாரிக்கும் போது
குழந்தைக்கு தண்ணீர் கொடுங்கன்னு கேட்டேன் மூத்திரத்தைக் கொடு ன்னு அதிகாரி சொன்னாரு என பாதிக்கப்பட்ட பழனியம்மாள் நீதிமன்றத்தில் நீதியரசர்
அசோக்குமாரிடம் சொன்னார்.அந்நீதிபதி சற்றுநேரம் உறைந்துபோய் யார் அவன்  உன்னால் இங்கு அடையாளம் காட்டமுடியுமா? எனக் கேட்க பழனியம்மாள் 269 பேரில் அப்படிச் சொன்னவனை சரியாக அடையாளம் காட்டினார்.
        இப்படி எத்தனையோ வாக்குமூலங்கள் நம் நெஞ்சைப் பதறவைத்து இது நாடுதானா? இல்லை சுடுகாடுதானா? என்று பதைக்கவைக்கும் அளவில் விசித்திரங்கள்  நிறைந்ததுதான் வாச்சாத்தி வழக்கு.
             அப்படி என்னதான் நடந்தது வாச்சாத்தியில் ? 
            தர்ம்புரி மாவட்டம் சித்தேரி மலை அடிவாரத்தில் வாச்சாத்தி கிராமத்தில் 1992 ஜூன் 20 ந்தேதி மலைவாழ் பழங்குடி மக்கள்மீது கொடூரமான முறையில்
காவல்துறை,வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய மூன்றும் அகோரத் தாண்டவமாடின. 18 பெண்களை பாலியல் வன்புணர்ச்சி இழிசெயல்களையும் புரிந்தனர். வீடுகளை ,உடைமைகளை துவம்சம் செய்தனர். ஆடுகளைப்பிடித்து வெட்டி சமைத்து சாப்பிட்டுவிட்டு ஆட்டுத் தோல், எலும்புகளை குடிதண்ணீர் கிணற்றில் போட்டு மக்களின் தாகத்திற்குக் கூட கொள்ளிவைத்தனர். இச்சம்பவம் வெளியே தெரிந்து விடாதபடி கிராமமே வெறிச்சோடி கிடக்குமளவு 28 குழந்தைகள்,90 பெண்கள், 28ஆண்கள் உட்பட 133
பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். அக்கிராமத்திலிந்து தப்பியோடிய சிலர்
மலைவாழ்மக்கள் சங்கத் தலைவர்களுக்கும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
முன்னால் சட்டமன்ற உறுப்பினர் எம்.அண்ணாமலைக்கும் தெரிவித்தனர். உடனே
மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர்கள் பெ.சன்முகம், பாஷாகான்,கிருஷ்ணமூர்த்தி,
சித்தேரி பொன்னுச்சாமி உட்பட பலர் சேலம் சிறையில் மக்களைச் சந்தித்து நடந்தவற்றைக் கேட்டு புகார்களை காவல்துறைக்கும், உயர் அதிகாரிகளுக்கும் கொடுத்தனர். அன்றைய மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் ஏ.நல்லசிவன் நேரில் சென்று நடந்த துயரங்களை, வேதனைகளை ஊடகங்கள் மூலம் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தினார். அன்றைய அ தி மு க அரசு இவையெல்லாம் பொய் என்று
அலறித்துடித்தது. நம்பர் போர்டு இல்லாத லாரியில் சாதாரண உடையில் சந்தனக்
கட்டைகளைக் கடத்திச் சென்ற வன ஊழியரை மடக்கிப் பிடித்து அரசின் சொத்தைப் பாதுகாக்க முயற்சித்தவர்கள் மீதே வழக்குப்போட்டு , ஊழல் வெளியே
கொண்டுவர சாட்சிகளாக இருக்கக் கூடாது என்பற்காகவே இந்த மூன்று துறையினரும் அந்த அப்பாவி மக்கள்மீது அட்டூழியங்களை அவிழ்த்துவிட்டனர்.
   மலைவாழ்மக்கள்தான் சந்தனக் கட்டை கடத்துபவர்கள், இதைத் தடுக்கப் போன
அதிகாரிகளை ஊர்மக்கள்தான் தாக்கினார்கள், கம்யூனிஸ்டுகள்  சொல்லக்கூடிய
எந்தக் குற்றச்சாட்டுமே அங்கு நடக்கவில்லை என்று அன்றைய அரசு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்தது.
    1995ல் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் ஆர்.வைகை,என்.ஜி ஆர் .பிரசாத் , இளங்கோ, சம்கிராஜ் ஆகியோர் வாதாடினர். உச்சநீதிமன்றம் வழக்கை சி பி ஐ க்கு மாற்றி உத்தரவிட்டது.
     நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் பிரசனைக்கு தீர்வு கண்டு குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த தி மு க அரசு இம்மக்களின் வழக்குமீது எவ்வித அக்கரையும் செலுத்தவில்லை.
   2002ல் வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கும், பின்பு தர்மபுரி நீதிமன்றத்திற்கும் வழக்கு தாவித் தாவி ஒடி, இழுத்தடிக்கப் பட்டதோடு குற்றவாளிகளை அடையாளங்காட்ட  பலமுறை அடையாள அணிவகுப்புகள் நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்களை மேலும் மேலும் ஒவ்வொரு நீதிபதியிடமும் சாட்சியமளிக்க வைத்து அலைக்கழிவு செய்தனர். இந்த விசாரணை நடைபெறும் காலத்திலேயே 54 பேர் மரணமடைந்துவிட்டனர். இதில் 215 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி வரலாற்றில் முதன்மை முத்திரையைப் பதித்தனர் நீதிமான்கள்.
    19 ஆண்டு காலம்  போராடிய அந்த மக்கள், மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர்கள், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின  முன்னாள் எம் எல் ஏ தோழர்
அண்ணாமலை, இந்நாள் எம் எல் ஏ தோழர் டில்லிபாபு, அன்றைய மார்க்ஸிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் தோழர் ஏ. நல்லசிவன், வழக்கில் வாதாடிய தோழர்
பி.ராமமூர்த்தியின் புதல்வியான வைகை உட்பட வழக்குரைஞர்கள் ஆகியோருக்கு
மட்டுமல்ல இந்த வரலாற்றில் பதிக்கவேண்டிய தீர்ப்பின் வெற்றி. தேசத்தை நேசிக்கிற, சமூக மாற்றத்தை விரும்புகிற ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி.
     இவ்வெற்றியை பாதிக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளும், பறிதவித்த குழந்தைகளும் இனிப்பை இன்முகத்தோடு கொடுக்கவில்லை. மாறாக ஆறாக
பெருக்கெடுத்தோடும் கண்ணீரையே நன்றியின் அடையாளமாக சிந்தி, நமது மக்களின் மனச்சாட்சிகளை உத்வேகப்படுத்தியுள்ளனர்.
     தண்டனை பெற்ற அனைவரும் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். 19ஆண்டுகாலம் போராடிய தோழர்களின் வேர்வைக்கும்,பாதிக்கப்பட்ட மக்கள் சிந்திய செந்நீருக்கும் கண்ணீருக்கும் இந்த ஜனநாயகம் நல்ல தீர்ப்பு வழங்குமென்று நம்புவோம்.
    பாதிக்கப்பட்ட அபலைகளின் போர் மட்டுமல்ல, உ.ழைக்கும் மக்களின் உரிமைகளை உயர்த்திப் பிடிக்கின்ற மத்திய தர கருத்தால் கரத்தால் உழைக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் திங்கள் ஒளியில் துயிலவோர்க்கும் தினம்  சூரியத் தீயினில் குளிப்போர்க்கும்
 போர் இன்னும் முடியவில்லை-இந்த
   பூமி முழவதும் விடியும் வரை.
                                                                                முனைவர். க.கணேசன்
                                                                             
                                                                               
 
          

No comments:

Post a Comment